Tuesday, October 12

இறுதிநாளின் பிறிதொரு அடையாளம் பயங்கரவாதி தஜ்ஜால் வெளியாகுதல்

நாற்பது நாள்களில் உலகை வலம் வந்து மக்களை வழிகெடுப்பான் 
இப்றாஹிம் நத்வி

இறுதி நாளின் அடையாளங்கள் பலவுள, அவற்றுள் மிக முக்கியமானதும் உலகப் பிரசித்தம்பெற்றதும் தஜ்ஜாலின் வருகை பற்றியதாகும். 

தஜ்ஜால் பற்றி நபீகள் (ஸல்) அவர்கள் பல கருத்துக்களை நவின்றுள்ளார்கள் 

“ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதற்கும் இறுதி நாளுக்குமிடையில் எத்தனையோ “பித்னஹ்” குழப்பங்கள் ஏற்படும். அவற்றுள் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பமே மிகப்பெரியதாகும்.” அன்று நபீகள் (ஸல்) நவின்றார்கள். 

மேலும் நபீகள் சொல்கையில் ‘உலகில் தோன்றிய நபீமாரெல்லாம் தங்களின் சமூகத்தவர்களுக்கு தஜ்ஜால் பற்றியே எச்சரித்தும் அவன் பற்றிய வர்ணனைகளையுமே செய்துள்ளார்கள்’ என்று! 

மேலும் நபீகள் சொல்கையில் “தஜ்ஜால்” ஒரு குருடன் உங்களின் இரட்சகனாகிய இறைவன் குருடனல்லன்’ என்று! 

மனிதனா? இப்லீஸா! 
நபீ (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே, தஜ்ஜாலைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் அவன் ஆதமின் மைந்தனா? அல்லது இப்லீஸின் மகனா? என்று கேட்டார். 

அதற்கு நபீகள் (ஸல்) ‘அவன் ஆதமின் மகன்தான். ஆனால் அவனது தாய் இப்லீஸின் பிள்ளைகளில் ஒருவர். அவன் உங்கள் (கேள்வி கேட்டவர் ஒரு யஹூதி) கூட்டத்தாரைச் சேர்தவனே என்று பதிலளித்தார்கள். 

தஜ்ஜாலின் பெயர்கள் 
தஜ்ஜாலுக்கு பல பெயர்கள் உள்ளன. சிலர் அவனை ‘ஸாயிப்பின் ஸய்யாத்’ என்றழைகின்றனர். பிறிதொருரிவாயத்தின்படி அப்துல்லாஹ் என்றழைக்கப்படுகின்றான். மேலும் அவன் ‘மஸீத்’ என்றும் அழைக்கப்படுகின்றான் காரணம் அவனது இரண்டு கண்களில் ஒன்று தடவப்பட்டுள்ளது. இன்னொரு கருத்தின்படி குறுகிய காலத்தில் அவன் பூமியைக் கடப்பதனாலும் ‘மஸீஹ்’ என்று அழைக்கப்படுகின்றான் 

மேலும் ‘கத்தாப்’ பொய்யன் என்று பெயர் சொல்லப்படுகின்றான் இன்னும் சமூகத்திற்கு எச்சரிக்கை செய்த பல பெயர்களும் அவனுக்குள்ளன. 

அவதாரமும் நபீத்தோழர்கள் கண்ட அதிசயமும் 
நபீ (ஸல்) அவர்கள் ‘மஸ்ஜிதுன் நபவீ’ பள்ளிவாயலில் சுபஹ் தொழுதுவிட்டு தோழர்களுடன் இருக்கும்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், முஹம்மது பின் ஸலாம் ஆகிய நபீத்தோழர்கள் வந்து, அல்லாஹ்வின் றஸூலே என்றழைத்து சலாமுரைத்து நின்று 

எங்களின் வாழ்கையில் இதுவரை கண்டிராத, கேட்டிராத அதிசயமிகு விடயத்தைக் கண்டு வந்துள்ளோம் என்றனர். 

நபீயவர்கள் அது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் (அப்போதழைக்கப்பட்ட) முஸ்தபா என்ற ஊரில் அதன் தலைவரிடம் இருக்கும்போது யஹூதிகளான கத்தா-ஸாஹில் என்ற தம்பதியினருக்கு தஜ்ஜால் பிறந்து விட்டான் என்ற பின்வரும் செய்தி கிடைத்தது 

அவனது அன்னை ‘கத்தா’ கைதேர்ந்த சூனியக்காரியாகவும் பொய்சொல்பவளாகவும் பெண்களின் மகா கெட்டவளாகவும் இருந்தாள். அவனுடைய தந்தை அவனுக்கு ‘அறுஸ்’ என்றும் தாய் ‘தஜ்ஜால்’ என்றும் பெயர் வைத்தனர். 

அவன் பிறந்தபோது உடன் நேராக இருந்து தனது தாயைப் பெயர் கூறி அழைத்தான். பின்பு ஏதோ ஒன்றை ஓதி அதைத் தனது உடலில் அவனே ஊதியபோது மலைபோல் ஆனான் பின்பு சிறியவனானான், பின்பு பெரியவனானான் இப்படியெல்லாம் தனது வித்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தான். அதை மனிதர்கள் அறிந்து அவனை பார்ப்பதற்கு பெரும் திரளாகச் சென்று கொண்டிருந்தனர். நாங்களும் இதைக் கேள்வியுற்று அறிந்தபோது அவனைக் காணவேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கும் ஏற்பட்டது உடன் “அமீர்” தலைவரிடம் அனுமதி பெற்று அவனது வீட்டுக்குச் சென்றோம் அவன் தனது தாயுடன் அமர்ந்திருந்தான் எங்களை அவன் கூர்ந்து பார்த்தான் அப்போது அவனது தாய் மகனே, முஹம்மதின் தோழர்கள் இருவர் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்னாள். 

அவன் முஹம்மது (ஸல்) அவர்களின் திருப்பெயரை கேட்டபோது நிச்சயமாக முஹம்மது எனது பகைவர், அவரைத் தவிர எனக்கு பகைவர் இல்லை என்று சொன்னவன் ஏதோ ஓதி அதை தனது உடலில் ஊதினான் உடன் மலைபோல் தொன்றினான். “ நான், ஆணவம்” மிகைத்தவனாக பெருமையடித்தான் அவனது இத்தனை நடவடிக்கைகளையும் கண்ணுற்ற நாங்கள் இவன்தான் தஜ்ஜால் என்று உறுதி செய்து கொண்டோம் என்று நபீகளுக்கு நவின்றனர். 

அவனில் வேறு ஏதும் கண்டீர்களா? என்று நபீகள் கேட்டார்கள். அதற்கு அவ்விருதோழர்களும் “அல்லாஹ்வின் திருத்தூதரே! அவன் இடது கண் குருடனாகவும் இருந்தான். அடர்த்தியான நீண்ட முடியிருந்தது அவனது இரண்டு கண்களுக்கிடையே இவன் இறைவனை நிராகரித்த காபிரும் சபிக்கப்பட்டவனும்” என்று எழுதப்பட்டிருந்தது. ஊர்மக்கள் அனைவரும் இவன் தஜ்ஜால்தான் என்று சொல்கின்றனர் என்பதாக நவின்றார்கள். 

நபீகள் கண்ட அதிசயக் காட்சி 
இதைக் கேட்ட நபீகள் திலகம் தனது தோழர்களுடன் முஸ்தபா என்ற ஊருக்கு புறப்பட்டார்கள். அவனது வீட்டு வாயிலை நெருங்கியபோது தனது தோழர்களை விளித்து “அலிப்லாம்மீம் ஸூறதுஸ்ஸஜ்தாஹ்” என்ற அத்தியாயத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அவன் தஜ்ஜாலாக இருப்பின் நாம் நினைத்ததை அறிவான் எமக்கதைத் தெரிவிப்பான் என்றார்கள். 

சஹாபாக்கள் அதை மனதில் நினைத்து கதவைத் தட்டினார்கள். அவனது தாய் கதவைத் திறந்தாள். நபீ (ஸல்) அவர்களையும் தோழர்களையும் கண்டு மகனுக்கு எடுத்துரைத்தாள். அது கேட்ட லயீன் (தஜ்ஜால்) எனது பகைவனுக்கு கதவைத் திறந்துவிடு என்றான். உத்தரவின்படி கதவை முழுமையாகத் திறந்து விட்டாள் அப்போது நபீகள் (ஸல்) அவர்கள் தங்களது இடது காலை முன்வைத்து உள்ளே நுழைந்தார்கள். அதை கண்ட நபீத் தோழர்கள் இவன் சபிக்கப்பட்ட தஜ்ஜால்தான் என்பதை திடமாக அறிந்து கொண்டனர். 

நபீகளைக் கண்ட தஜ்ஜால் அவர்களைக் கூர்ந்து நோக்கினான் எதுவும் பேசவில்லை, ஆனால் ஏதோ ஓதி உடலில் ஊதினான் உடன் மலைபோல் மாறிவிட்டான் அவனது இரு கண்களுக்குமிடையில் “காபிறுன் பில்லாஹி தஜ்ஜாலுன் கத்தாபுன்” என்று எழுதப்பட்டிருந்தது 

வினாவும் விடையும் 
நபீகள் (ஸல்) அவர்கள் அவனை விளித்து, சபிக்கபட்டவனே நாங்கள் உமது வீட்டுக்கதவடியில் வைத்து மனதில் நினைத்தது எது? என்று கேட்டார்கள். அதற்கவன் “அலிப்லாம்மீம் ஸூறஹ்” என்று சொன்னவன் அதில் சில வசனங்களையும் ஓதினான். இதைக் கேட்ட நபீகள் திலகம் மீண்டும் அவனை நோக்கி மல்ஊனே, இறைவன் ஏகன் என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர் என்றும் சொல் என்றார்கள் 

உமரின் தீரம் 
அதற்கு அவன் உங்களின் இறைவன் நான்தான் என்று நீங்கள் சொல்லுங்கள் என்றான். இது கேட்ட வீர்ர் உமர் (றழி) அவர்கள் தனது வாளை உருவி அவனது தலையில் வெட்டினார்கள். அது அவனுக்கு எத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை அவ்வாள் உயர்ந்து உமர் (றழி) அவர்களின் தலையைத் தாக்குவதற்கு நாங்கு விரல் அளவுக்கு அப்பாள் தெறித்தது. 

நபீ (ஸல்) அவர்கள் உடன் உமரின் பால் திரும்பி “உமரே! நீ ஏன் அவனை வெட்டினாய்?” அவனை வெட்டுவதற்கு நீ சாட்டப்படவில்லை, அவன் இறுதி நாள் வரை இருப்பான். அவனை அதிகமானோர் பின்பற்றுவர் அவர்களை அவன் வழிகெடுத்து நரகில் வீழ்த்துவான் என்று சொல்லியதைத் தொடர்ந்து அவனது வீட்டை விட்டும் வெளியேறினார்கள் அவர்களுடன் தோழர்களும் சென்று மதீனாவை அடைந்தார்கள் ஆனால் நபீத்தோழர்களில் சிலர் அங்கு நின்று தாமதமாகச் சென்றனர். 

போர் 
அவர்களைத் தொடர்ந்த தஜ்ஜால் நீங்கள் என்னை வாளால் வெட்டிவிட்டு உங்களது மதீனாவுக்கா செல்கிறீர்கள்? உங்களை நான் விடமாட்டேன் என்று சத்தவிட்டவாறு நெருங்கினான் நபீத்தோழர்களுக்கும் அவனுக்குமிடையே பெரும் சண்டை நிகழ்ந்தது சஹாபாக்கள் அம்புகளாலும், ஈட்டிகளாலும், கற்களாலும் அவனுக்கு எறிந்தனர் ஆனால் அவன் தன்னை நோக்கிய ஆயுதங்களைப் பார்த்து நில் என்றான் உடன் அவை அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு மதில் சுவர்போல் அவனைத் தொடராமல் மாறின. இதைக்கண்ட நபீத்தோழர்கள் தோல்வியுற்று ஒரு மலையின் குகையினுள்ளே புகுந்தனர். 

தோழர்களின் அபயக்குரல் 
துரத்தி வந்த தஜ்ஜால் பெரியதோர் மலையைப் பிடுங்கி குகை வாசலை அடைத்துவிட்டான். நபீத்தோழர்கள் குகையினுள் கைதியானார்கள் வெளியில் வர அவர்களால் முடியவில்லை உள்ளேயிருந்து பெரும் சத்தமிட்டனர் இவர்களின் அபயக்குரல் உமர் (றழி) அவர்களுக்குக் கேட்டது அப்போது அவர்கள் மதீனாவில் வுழூ செய்து கொண்டிருந்தார்கள். வுழூ செய்வதை விட்டு விட்டு நபீயவர்களிடம் ஓடி வந்த உமர் (றழி) அவர்கள் யாறஸூல்லாஹ் இறுதிநாள் அண்மித்து விட்டது உங்களது தோழர்களை தஜ்ஜால் மலையில் அடைத்துவிட்டான் என்ற துயரச் செய்தியை நபீகளுக்கு எத்தி வைத்தார்கள். 

பிரார்த்தனை 
இதைக் கேட்ட நபீகள் (ஸல்) அவர்கள் கவலையுற்று அல்லாஹ் அளவில் முன்னோக்கி தனது தோழர்களைப் பாதுகாக்குமாறு பிரார்த்தித்தார்கள். நபீ (ஸல்) அவர்களின் பிராத்தனையை ஏற்ற இறைவனின் நபீத் தோழர்களைக் காப்பாற்றும் படியும் “காப்” மலையின் பின்னால் தஜ்ஜாலை அடைக்கும் படியும் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஃமீன்களை குகையிலிருந்து விடுதலை செய்து தஜ்ஜாலை சிறையிட்டார்கள். 

தஜ்ஜால் சிறையில் 
எழுபது சங்கிலிகளால் அவனைக் கட்டி விலங்கிட்டு அவனது நெஞ்சில் பெரியதோர் மலையை வைத்தார்கள். நெஞ்சில் மலையை வைக்கும்போது அவன் பெரும் சத்தமிட்டு நான் முஹம்மதின் மார்க்கத்தில் நுழைந்துவிடுகின்றேன் என்றான். அது கேட்டும் ஜிப்ரீல் (அலை) அவனைத் திரும்பிப் பார்க்கவில்லை. 

அவன் தினமும் தனது நெஞ்சிலுள்ள மலையை நக்குவதாகவும் அது கொஞ்சம் நகர்வதாகவும் மறுநாள் முன்புபோல் அது ஆகிவிடுவதாகவும் இறுதி நாளில் அவன் வெளியாகும்வரை இன்நிலை தொடர்வதாகவும், இறுதி நாளானால் சங்கிலிகள் உடைந்து வெளிவருவான் என்றும் ஜிப்ரீல் (அலை) மூலம் நபீகளுக்கு அறிவிக்கப்பட்டது இது கேட்டு நபியவர்களும் தோழர்களும் மகிழ்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றியும் தெரிவித்தார்கள். 

தஜ்ஜால் பற்றிய பிறிதொரு தகவல் 
பாத்திமா பின் துகைஸ் அவர்கள் சொல்கிறார்கள் “தமீமுத்தாரீ என்ற தோழர் நபீ (ஸல்) அவர்களிடத்தில் சொன்னார்கள் நான் குஷ்ட நோயால் பீடிக்கப்பட்ட முப்பது பேருடன் சிரியா நாட்டிலிருந்து கடல் கப்பல் மூலம் ஒரு பிரயாணத்தை மேற்கொண்டேன். கடலில் கடும் காற்றும் அலையும் ஏற்பட்டது. கடலில் ஒரு மாதத்தைக் கழித்து சூரியன் மறையும் நேரத்தில் ஒரு தீவை அடைந்தோம். 

அதிசயமிருகம் 
அங்கு எங்களை ‘அஹ்லுப்’ என்ற மிருகம் எதிர் கொண்டது. அம்மிருகத்திடம் நீயார்? என்று கேட்டோம் அதற்கது நான் ஒரு உளவாளி என்றது. ஏதாவது எமக்கு சொல் என்றோம் அதற்கு நான் எதையும் அறிவிப்பதற்கில்லை. ஆயினும் நீங்கள் இங்கிருக்கும் ஒரு மனிதரைச் சந்தியுங்கள் அவர் உங்களைப் பார்ப்பதற்கு ஆசையுடையவராக இருக்கிறார் என்றது. அது ஷைத்தானாக இருக்குமோ என்று அச்சமும் ஏற்பட்டது. 

பயங்கர மனிதன் 
இருப்பினும் துணிந்த நாங்கள் அதைத் தொடர்ந்து சென்றோம். அங்கே ஒரு பெரிய உருவத்தையுடைய ஒரு மனிதனைக் கண்டோம். அவன் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டான். அவனது கழுத்துடன் சேர்த்தும், முட்டுக்கால்களை கொண்டைக் காலுடனும் சேர்த்து கட்டப்பட்டு இரும்புச் சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தது 

நீயார்? என்று நாங்கள் கேட்டோம் அதற்கவன் எனது செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? நீங்கள் யார்? என்றான் நாஙகள் அறபு மக்கள் ஒரு மாதம் கடலில் தத்தளித்து இக்கரையை அடைந்தோம் இம்மிருகம் எங்களை உன்னிடம் அழைத்து வந்தது என்று சொன்னோம். 

தஜ்ஜாலின் கேள்விகள் 
அதற்கவன் ஷன்ஆன் ஈத்தம் தோப்பு உள்ளதா? அது தற்போது கணி கொடுக்கிறதா? என்று வினவினான். ஆம் என்று சொன்னோம் அதற்கவன் அது கணி தராத ஒரு காலம் வரும் என்றான். ஸஃர் ஊற்றுக்கண் பற்றி அறிவீர்களா? அதில் தற்போது நீர் உள்ளதா? அதைக் கொண்டு மக்கள் பயிர் செய்கிறார்களா? என்று கேட்டான் ஆம் உள்ளது அதைக் கொண்டு மக்கள் பயிர் செய்கிறார்கள் என்றோம். 

அடுத்து அல் அமீன் நபீயைப் பற்றி சொல்லுங்கள் என்றான் அதற்கு நாங்கள் அவர் மக்கஹ்வில் தோன்றி யத்ரிப் (மதீனா) நகரில் இருக்கின்றார் அறபிகள் அவருடன் போர் செய்கின்றனரா? என்று கேட்டான் ஆம் என்று கூறிய நாம் அவருக்கு மக்கள் வழிப்படுகின்றனர் என்றோம் அவருக்கு வழிப்படுவதே அவர்களுக்கு நல்லது என்றான். 

நானே மஸீஹூத் தஜ்ஜால் இதுவரை நான் வெளியாவதற்கு உத்தரவு கிடைக்கவில்லை. உத்தரவு கிடைத்த்தும் நான் வெளியாகி ஊர்களைக் கடப்பேன் மக்கஹ், மதீனாஹ் தவிர்ந்த எல்லா ஊர்களையும் ஒரு கிராமமும் விடாமல் நாற்பது இரவுக்குள் கடந்து விடுவேன் மக்காவையும் மதீனாவையும் அடைவது எனக்கு தடுக்கப்பட்டுள்ளது என்றான். 

தஜ்ஜால் வருகைக்குரிய அடையாளங்கள் 
தஜ்ஜால் வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு காலநிலை மாற்றங்கள் தோன்றும் முதலாம் வருடத்தில் வானம் பெய்யும் மழையில் 1/3 பகுதியையும் பூமி தாவரத்தில் 1/3 பகுதியையும் தடுத்துக் கொள்ளும். 

இரண்டாம் வருடன் 2/3 பகுதி வானமும் பூமியும் மூன்றாம் வருடம் வானமும் பூமியும் அனைத்தையும் தடுத்துக் கொள்ளும். வானத்தில் இருந்து ஒரு துளி மழை கூட இறங்காது பூமியில் பசுமையே இருக்காது பூமி செம்புத்தரை போலும் வானம் கண்ணாடி போலும் காட்சி தரும் மக்கள் பசிதாகத்தால் மரணிப்பர் மக்களிடையே கொலையும் குழப்பங்களும் தோன்றும் மனிதர்கள் நன்மையை ஏவுவதையும் தீமையை தடுப்பதையும் விட்டு விடுவர் 

தஜ்ஜாலின் வருகை 
இத்தகு நிலையில்தான் இஸ்பஹான் தேசத்தில் ‘யஹூதிய்யஹ்’ என்ற கிராமத்தில் மல்ஊன் தஜ்ஜால் தோன்றுவான். பிறிதொரு ஹதீஸியின் படி கிழக்கில் குறாஸான் என்ற ஊரில் தோன்றுவான் என்றும் சொல்லப்படுகின்றது. 

அவன் தொன்றியதும் மூன்றுமுறை சத்தமிடுவான். இதைக்கிழக்கில் மேற்கில் வாழும் அனைவரும் கேட்பர். அவனுடன் விபச்சாரத்தில் உருவான் பிள்ளைகள் சேர்ந்து கொள்வர். அவனை அகமாகப் பெண்களும், காட்டறபிகளும், யஹூதிகள் கோபத்திற்குரியவர்கள், மூதேவிகள், சூனியக்காரர்களுமே பின்பற்றுவர். 

நபீகள் (ஸல்) அவர்களின் சமூகத்தினரில் எழுபதினாயிரம் பேர் பின்பற்றுவர் அவர்கள் பச்சை உடை அணிந்திருப்பர். அவனுக்குச் சூழால் எழுபதாயிரம் பேர் இசைக்கருவிகளுடன் செல்வர் பூமியின் கடவுள் என்று சொல்லிக் கொண்டு பவனி வருவர். அதை அவனைப் பின்பற்றுபவர்களே கேட்பர். 

அன்று சூரியன் பல நிறங்களில் உதயமாகும். ஒரு தரம் சிவந்து, மறுதரம் மஞ்சலாகவும், கறுப்பாகவும் தோன்றும் பூமி நடுங்கத்தொடங்கும். 

தஜ்ஜால் எப்படியிருப்பான் 
இறைவன் அவனை பெரும் படைப்பாகப் படைத்துள்ளான். உயரமானவன் அதற்கேற்ற உடலைக் கொண்டவன். உடல் முறுக்கேறியவன். வலது கண் பொன்டையானவன் இடது கண் இரத்த்த்தால் துவட்டப்பட்டவன். 

பிறிதொரு ஹதீதில் அவனது இடது கண் பச்சைபளிங்கி போன்றிருக்கும் அவனது தலை மரக்கிளைபோல் இருக்கும் அது தோள் புயத்தில் நீண்டு வழிந்திருக்கும், நெற்றி உயர்தவனும், மூக்குத் துவாரம் அகலமானவனுமாவான் அவனது கண்களுக்கிடையே “காபீர்” என்று எழுதப்பட்டிருக்கும் இதை எழுதத் தெரிந்த தெரியாத ஒவ்வொறு முஃமினும் அறிந்து கொள்வர். 

அவனது கழுதை
அவன் ஒரு கழுதையில் ஏறி வருவான் அதன் நீளம் ஒரு இலட்சத்து பதினெட்டு முழமாகும். அதன் இடது கால் வெள்ளியாலும் அதன் இரு செவிகளுக்கும் இடையிலுள்ள அகலம் நாற்பது முழமும் இருக்கும். அதன் நெற்றியில் ஓரம் உடைந்த கொம்பிருக்கும். அதன் வழியாக பாம்புகளும், நட்டுவக்காலிகளும் வெளியாகும் பெரும் ஆயுதங்களையும் சுமந்து செல்லும். மிருகங்களில் கழுதையைத் தவிர அதைப் பின் தொடராது. 

தஜ்ஜாலின் “பித்னஹ்” குழப்பங்களும், நடவடிக்கைகளும் 

‘எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது குழப்பங்களில் இருந்து எம்மைப் பாதுகாப்பானாக’ 
முதலில் அவன் தன்னை “நபீ” என்றும் பின்னர் “றப்” இறைவன் என்றும் சொல்வான். 
அவனுடன் தங்கத்தினாலான மலையொன்றும், வெள்ளியினாலான மலையொன்றும் உணவு பழங்களினாலான மலையொன்றும் கூடவரும். அதில் எவ்வளவு சாப்பிட்டாலும் அது குறையாது அவனது கூட்டத்தினர் அவனை உண்மைப்படுத்தி நீதான் எங்களின் தெய்வம் என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். 

அவன் ஒரு நாட்டறபியைப் பார்த்து நான் உனது பெற்றோரை எழுப்பினால் என்னை உனது இறைவனாக ஏற்றுக்கொள்வாயா? என்று கேட்பான் அதற்கு அறபி ஆம் என்பான் உடன் தஜ்ஜால் அவனது பெற்றோர்களின் தோற்றத்தில் இரு சைத்தான்களைத் தோன்றுவிப்பான் அவர்கள் இருவரும் எங்கள் மகனே, இவரைப் பற்றிக்கொள் இவர்தான் உனது இறைவன் என்று சொல்வார்கள். 

மரித்தவர்களில் ஒருவரை எழுப்பி, அவரைக் கொலை செய்து இரு பகுதிகளாகப் பிளந்து இவனுக்கு நானே இறைவன் என்று சொல்வான். அப்போது இறைவன் அம்மனிதனுக்கு உயிர் கொடுப்பான். அம்மனிதனிடம் உனது இறைவன் யார்? என்பான் அதற்கு அந்த உயிர் பெற்ற மனிதன் எனது இறைவன் அல்லாஹ்தான் நீ அல்லாவின் பகைவனான தஜ்ஜால் என்பார். 

இம்மனிதரைப் பற்றி நபீகள் (ஸல்) அவர்கள் எனது சமூகத்தவரில் அந்த மனிதர் சொர்க்கத்தில் மிக உயர் பதவியை உடையவர் என்று நவின்றார்கள் 

இமாம் அபூசயீத் அல்குத்ரீ (றஹ்) அவர்கள் அம்மனிதர் அமீறுல் முஃமினீன் உமர் (ரழி) அவர்கள்தான் என்று சொன்னார்கள் 

தஜ்ஜால் வானத்தைப் பார்த்து மழைபொலி என்று கட்டளையிடுவான் வானம் மழை பொழியும் பூமிக்கு கட்டளையிடுவான் பூமி புல் பூண்டுகளை முளைப்பிக்கும் 

பாழ் பூமியைப் பார்த்து உனது புதையல்களை வெளிப்படுத்து என்று ஏவுவான் உடன் புதயல்கள் அதிலிருந்து வெளிப்படும். 

இறைவன் தஜ்ஜாலுடன் இரு மலக்குகளை அனுப்புவான் அவர்கள் இரு நபீமார்களின் தோற்றத்தை ஒத்திருப்பார்கள் ஒருவர் அவனின் வலப்பக்கமும் மற்றவர் இடப்பக்கமும் இருப்பார். 

தஜ்ஜால் மனிதர்களிடம் நான் உங்கள் இறைவன் என்பான். அதற்கு வலப்பக்கதில் இருக்கும் மலக்கு நீ பொய்யன் பொய் சொல்கிறாய் என்பார். அவரது வார்த்தை இடப்பக்கத்திலிருக்கும் மலக்குக்கு மட்டுமே கேட்கும் மற்றவர்களுக்கு கேட்காது. மற்ற மலக்கு அதற்குப் பதிலாக நீங்கள் பொய்யன் என்று உண்மையே சொன்னீர்கள் என்பார். அங்கிருந்தவர்களுக்கு வலது மலக்கின் பொய்யன் என்ற வார்த்தை கேட்காததாலும் இடது பக்க மலக்கின் உண்மையே சொன்னீர்கள் என்ற வார்த்தை கேட்டதாலும் இவர் தஜ்ஜாலைத்தான் உண்மைப்படுத்துகிறார் என்று நினைத்துக் கொள்வார்கள் இதுவும் பெரும் குழப்பமேயாகும். (இக்கட்டனான இந்நேரத்திலும் மனிதனின் ஈமான் எப்படியிருக்கிறது என்பதை இறைவன் சோதிக்கிறான்) 

தஜ்ஜால் பிறவிக் குருடனை பார்வை பெறச் செய்வான் குஷ்டரோகியைச் சுகப்படுத்துவான் மரணித்தோரை உயிர் பெறச் செய்வான். 

ஆகாயத்தில் பறக்கும் பறவையை அழைத்து அறுப்பான் பின் அதை முன்புபோல் பறக்கச் செய்வான். 

அவனது வலது பக்கம் சொர்க்கத்தையும் இடது பக்கம் நரகத்தையும் கொண்டு வருவான் அவனைப் பின்பற்றியவரை சொர்க்கத்தில் வைப்பான் ஆனால் அல்லாஹ் அவனை நரகில் போடுவான். அவனுக்கு மாறுசெய்தவர்களை நரகில் போடுவான் ஆனால் அல்லாஹ் அவர்களை சொர்க்கத்தில் நுழைப்பான். 

தஜ்ஜால் கிழக்கிலும் மேற்கிலும் எல்லா ஊர்களுக்கும் செல்வான் ஒரு எட்டு வைத்தால் நாட்பது நாட்களின் தூரத்தை கடப்பான் எல்லா ஊர்களையும் அவன் கெடுப்பான் ஆனால் மக்கா மதீனா வைத்துல் முகத்தஸ், தூர்ஸீனா மலை ஆகிய நான்கு இடங்களிலும் அவனால் செல்ல முடியாது. 

மக்காவை அவன் நெருங்குவான் ஆனால் அதில் புக அவனால் முடியாது இறைவன் அதைச் சூழால் பெரும் நெருப்பையே எட்டுபடுத்தி விடுவான். 

மதீனாவுக்குச் செல்வான் அதன் வாயல்களில் மலக்குகள் அதைப் பாதுகாத்து அணிவகுத்து நிற்பர். அதனால் அவனால் அங்கு நுழைய முடியாது 

மதீனா மூன்றுமுறை துளுப்பும், அப்போது அதில் வாழ்ந்த முனாப்பிகீன்கள் அழிந்து விடுவர். 

பின் தஜ்ஜால் பாபில் என்ற நகரில் நுழைவான் அங்கு கழிர் (அலை) அவர்கள் அவனை எதிர் கொள்வார்கள் அவர்களிடம் நான்தான் “றப்புல் ஆலமீன்” என்று தஜ்ஜால் சொல்வான் அதற்கு கழிர் (அலை) நீ பொய் சொன்னாய் நீதான் பொய்யனான தஜ்ஜால் றப்புல் ஆலமீன் என்பவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவன் உன்னைப்போன்ற பொட்டைக் கண்ணன் அல்லன் என்பார்கள் 

இது தஜ்ஜாலுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அவர்களை கொலை செய்து விடுவான் பின் மக்களைப் பார்த்து நான் கொன்று விட்டேன் இவர் சொல்வதுபோல் இரு இறைவன் இருப்பின் இவரை உயிர்ப்பிக்கட்டும் பார்ப்போம் என்பான் 

உடன் அல்லாஹ் தஆலா அவரை அதேவேளை உயிர்பிப்பான் உயிர்பிக்கப்பட்ட கழிர் (அலை) எழுந்து நின்று தஜ்ஜாலே எனது இறைவன் என்னை உயிர்பித்துவிட்டான் என்பார். அவரை அறுப்பதற்கு தஜ்ஜால் முனைந்தபோது கழிர் (அலை) அவர்கள் மீது செம்பால் ஒரு கவசத்தை இறைவன் ஏற்படுத்துவான். அவனால் அவரை அறுக்க முடியாமல் போகவே தஜ்ஜால் தோல்வியடைவான். 

இதுபற்றி ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபி (றழி) அவர்கள் சொல்கையில் அறுக்கப்பட்டு உயிர் பெறுபவர் கழிர் (அலை) அல்ல அவர் ஈமான் நிரம்பப் பெற்ற ஒரு வாலிபராவார் அவரை கஷ்புடையவர்கள் கண்டு கொண்டுள்ளனர் என்றார். 

இதுபற்றி நபீகள் (ஸல்) அவர்கள் நவில்கையில் ‘இறையடியார்களே! ஈமானில் உறுதியாக இருங்கள் உங்களில் யாராவது அவனைச் சந்தித்தால் “ஸூரத்துல் கஹ்ப்” அத்தியாயத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்றார்கள். 

அல்லாவின் தூதரே அவன் பூமியில் எவ்வளவு நாள் இருப்பான் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபீகளார் “அவன் நாற்பது நாட்கள் இருப்பான் அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றது, இன்னும் ஒரு நாள் ஒரு மாதம் போன்றது, இன்னும் ஒரு நாள் ஒரு வாரம் போன்றது, ஏனைய நாட்கள் உங்களது நாட்கள் போன்றவை’ என்றார்கள் 

யாறஸூலுல்லாஹ் அவன் பூமியில் எவ்வாறு விரைவான் என்று கேட்டார்கள். “காற்று வீசும் மழைபோல்” என்று நபீகளார் பதிலளித்தார்கள். 

பைத்துல் முகத்தஸில் முஸ்லீம்கள் தஞ்சம் 

பின் தஜ்ஜாலின் தாக்குதலால் பிரிந்துசென்ற முஸ்லீம்கள் பைத்துல் முகத்தஸில் ஒன்று சேர்வார்கள். தஜ்ஜாலின் படைகளுடன் போர் தொடுப்பதற்கு தம்மைத் தயார் செய்யுமாறு மஹ்தீ (அலை) அவர்களிடம் வேண்டிக் கொள்வார்கள். 

உடன் மஹ்தி (அலை) படைகளைத் தயார் செய்து தாமும் சென்று தஜ்ஜாலுடன் கடும் சமர் புரிவார்கள். 

இச்சமரில் காபீர்களில் ஒரு இலச்சம்பேரும் முஸ்லீம்களில் முப்பதாயிரம் பேரும் கொல்லப்படுவார்கள் . மஹ்தீ (அலை) அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தொடர்ந்து போராடுவது கஷ்டமாக இருக்கும், அதனால் பைத்துல் முகத்தஸில் நுழைந்து அதன் வாயில்களை மூடிக்கொள்வார்கள். 

தஜ்ஜாலும் அவனது படைகளும் பைத்துல் முகத்தஸை அடையும்போது அங்கு காவலில் நிற்கின்ற மலக்குகள் அவர்களைத் துரத்தியடிப்பார்கள் உடன் மஹ்தீ (அலை) அவர்களும் தோழர்களும் இறை பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள் 

யா அல்லாஹ்! தஜ்ஜாலின் பித்னஹ்விலிருந்தும், அவனது சூழ்ச்சியிலிருந்தும் காப்பாற்றுவாயாக என்று. 

அப்போது இறைவனிடமிருந்து பின்வரும் செய்தி வரும் “ முஸ்லீம்களே! உங்களை இரட்சிப்பவரும், உதவி செய்பவரும் உங்கள் இறைவனிடமிருந்து வந்து விட்டார்” என்று இதைக் கேட்ட முஸ்லீம்கள் மகிழ்ச்சியடைவார்கள். 

தஜ்ஜாலை வெட்டிக் கொல்லும் நபீ ஈஸா (அலை) அவர்களின் வருகையே இறைசெய்தியில் குறிப்பிடப்படுவதாகும். 

முற்றும். 

கட்டுரை –சங்கைக்குரிய மௌலவி இப்றாஹிம் நத்வி 
பிரசுரம்- அல்மிஷ்காத் ஜூலை மாதம் 2006 ம் ஆண்டு இதழ். 



 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK