Shrine of Hazrath Ali (Rali) |
மன்ஸில்களைப் படிப்படியாகக் கடந்து, இறுதியில் "மஅரிபத்" எனும் சாசுவத பேரின்ப வீட்டையடைந்து நித்திய ஜீவனைப் பெற்றவர்களே அல்லாஹ்வின் அவுலியாக்களாவார்கள்.
எம்பெருமானார் றஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் கல்வியின் பட்டணம், அலி அதன் வாயில் என்பதாகத் தங்களது வாரிசாக ஸெய்யிதுனா அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
அறிஞர்களே நபிமார்களின் வாரிசுகள் என்பது மற்றொரு நாயக வாக்கியம்.
அவ்வாறு மெய்யறிவின் முதிர்ச்சியால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாரிசாகக் கூடியவர்களைப் பற்றி, என்னுடைய சமூகத்தார்களிலுள்ள அறிஞர்கள் பனீ இஸ்றாயீலிலுள்ள நபிமார்களைப் போன்றவர்களாவர் என்பதாக நபிகளுக்கரசர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.
எனது ஸஹாபாத் தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றுள்ளார்கள். அவர்களுள் எவரைக் கொண்டு பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி பெற்றவர்களாவீர்கள் என்பதாகவும் நபிகட்திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உரைத்துள்ளார்கள். (மிஷ்காத்து)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உண்மை வாரிசாகவும், அறிவின் வாயிலாகவம் திகழக்கூடிய ஸெய்யிதுனா அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் இன்னும் வேறு பெரியார்களில் நின்றும் ஆரம்பமான ஆன்ம சந்ததியாகியஸில்ஸிலாவின் தொடர்பு கொண்டு, அனுபவ வழிகளைப் பற்றிய மார்க்கங்களைத் தெரிந்தொழுகிய காரணத்தால்,
இல்முல்லதுன்னீ எனும் இறைசார்பிலிருந்து அருளப்படும் மெய்ஞ்ஞான பாக்கியம் பெற்றார்கள். சென்ற காலத்திய நபிமார்கள் முஃஜிஸாத்து எனும் அற்புதங்களை காண்பித்ததைப் போல் இவர்கள் கறாமாத்து எனும் அற்புதங்களைக் காட்டினார்கள்.
பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உத்திரவைப் பெறக்கூடிய திருஷ்டி வாய்ந்தவர்களாய் வாழ்ந்தார்கள். அவர்களது ஏவல் பிரகாரம் உலகின் பல பாகங்களுக்கும் சென்று தீன் சுடர் கொழுத்திய மகான்களுக்கே இக்கால அவுலியா என்ற பெயர் வழங்கி வருகிறது. இவர்களே நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரதிநிதிகள் உண்மை வாரிசுகள்.
உமது இறைவன் புவியில் நிழலை எவ்வாறு பரப்பியிருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா (25:45) எனவும் பூமியை நாம் விரிப்பாக்கி (அதில்) மலைகளை முளைகளாய் ஆக்கவில்லையா? (78:6,7) எனவும் ஆண்டவன் தனது பரிசுத்தத் திருமறையில் கூறியுள்ளான்.
இவை அவுலியாக்களைப் பற்றிய குறிப்பேயாம். இத்தகைய மெய்யடியார்களையெ இறைவன் நிழல் (ளில்லு) என்றும், மலை (ஜிபால்) என்றும் வருணித்துள்ளான். (ரூஹுல் பயான் தப்ஸீர் மொத்தம் 10 பாகங்கள் உண்டு. அதில் 4-வது பாகம் 199-வது பக்கத்திலும், 10-வது பாகம் 293-வது பக்கமும் நோட்டமிடுக)
எனது அடியான் நபிலான வணக்கங்களையும் விருப்புடன் பேணிச் செய்பவனாக நீங்கா வண்ணமாகி எனது முடுகுதலைப் பெறும் வண்ணம் நெருங்கி நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான்.
நான் அவனை நேசித்துவிட்டேனேயானால் அவன் கேட்கும் காதாகவும் - பார்க்கும் கண்ணாகவும் - பிடிக்கும் கரமாகவும் - நடக்கும் பாதமாகவும் நான் ஆகிவிடுகிறேன் என்று அல்லாஹுதஆலா கூறுவதாக ஹதீது குத்ஸியில் வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)
பர்ளான வணக்கங்களைச் செய்வதுடன், நபிலான வணக்கங்களைக் கொண்டும் ஆண்டவன் பிரியம் வைக்கும் வரையில் கலப்பற்ற விதமாக வணக்கம் செய்து அவனளவில் பனாவாகி இரண்டற்ற நிலைமையிலாகி விட்டால் அவருடைய செவி, கண், மூக்கு, நாக்கு, கை, கால் இன்னும் இதர உறுப்புகள் அனைத்தும் ஆண்டவனது சொல், செயல் வெளியாகும் தானங்களாகின்றன.
அவை, அவனது செயல்களைச் செய்கின்றன. ஆண்டவனுடைய நாட்டத்திலுள்ளவையனைத்தும் அன்னார் மூலம் நிகழுகின்றன. ஆண்டவனுடைய சக்தியானது அசலாகும்.
அடியானுடைய சக்தி ஆண்டவனால் அருட்கொடையாக, இரவலாகக் கொடுக்கப்பட்டதாகும். அவுலியாக்கள் அல்லாஹ்வின் அன்பில் (மஹப்பத்தில்) மையலான காரணத்தால் இந்தச் சக்தி அவர்களுக்குப் பாக்கியமானது.
எனவே இறைவனது கட்டளைப்படி அஞ்சிப் பயந்து தக்வாச் செய்து ஜெயம் பெற்றவர்களானபடியால் அவர்கள்தான் நபிமார்களுடைய வாரிசு பாத்தியத்திற்குரிய அவுலியாக்களாக விளங்குகின்றார்கள்.
பலதரப்பட்ட அந்தஸ்துக்களை உடையவர்களாக வலிமார்களை அல்லாஹ் ஆக்கிவைத்து மானிடர்களை நேரான பாதையை விட்டும் வழிதவறி நாசமடையாதிருக்கும் பொருட்டு வழிகாட்டிகளாகவும் இரட்சகர்களாகவும் அவர்களை அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான்.
கப்ரு ஜியாரத்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது. ஸலவாத் எனும் கருணையும் ஸலாம் எனும் ஈடேற்றமும் எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதிலும் அவர்களது கிளையினர், தோழர்கள் அனைவர்கள் மீதிலும் உண்டாவதாக.
இக்காலத்தில் சிலர் உண்மைக்கு மாறாக விஷமப் பிரசாரஞ் செய்வது வருந்தத்தக்கது. கல்வியின் முன்னேற்றத்தால் நன்மைகள் பல உண்டாகியிருப்பினும் இக்கலியுகத்தில் உண்மைக்கும், சத்தியத்திற்கும் பஞ்சமாகவேயிருக்கின்றது.
அத்தகைய விஷமப் பிரசாரங்களுள் அவுலியாக்களை, குத்புமார்களை நிந்திப்பதும், கப்ரு ஜியாரத்தை கப்ரு வணக்கம் அவுலியாப் பூஜை என இழித்துக் கூறுவதும், கறாமாத்துக்களைக் கேலி செய்து பழிப்பதும் ஒன்றாகும்.
உண்மையை அறியாதவர்கள், தான் அவ்வாறு பிதற்றித் திரிகிறார்களென்றால், அறிந்தவர்கள் கூட உண்மையைக் கூறாது வாய்மூடி இருப்பது தான் விந்தையாக இருக்கின்றது.
பஸாது குழப்பத்திற்கு அஞ்சி மௌனமாக இருப்பவர்கள் சுயமாகத் தங்கள் அபிப்பிராயங்களைக் கூறாவிட்டாலும் அக்கூற்றை மறுத்து முன்னோர்கள் கொடுத்திருக்கும் பத்வா எனும் மார்க்கத் தீர்ப்பையாகிலும் எடுத்துக் காண்பிக்கலாமே. அதன் காரணமாக அவர்கள் உண்மையை உணர்ந்து நேரான பாதையில் நடக்க அனுகூலமாயிருக்கும்.
அவர்களது விஷமப் பிரசாரத்தில் கற்றோர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தாது கண்மூடித்தனமாயிருப்பது நேர்மையன்று. பேயன் எறியும் கல்லும் அபாயத்தை விளைவிக்குமாகையால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
அவ்வாரே விஷமத்தனமான பிரசாரத்தைத் தடுத்து நிறுத்தி மெய் இன்னதென மக்களுக்கு எடுத்துரைத்துக் காட்ட வேண்டியது கடமையாகும்.
வலி என்பவர் யார்? அன்னாரது மகத்துவம் யாது? வலியின் ஆரம்பமென்ன? மவுத்துக்குப் பின்னும் அவர்களுக்கு ஹயாத்துண்டா? கறாமத் எனும் அற்புதங்கள் காண்பிக்க அவர்களுக்கு வல்லமையுண்டா?
அவர்கள் பால் வஸீலா எனும் உதவி தேடலாமா? நாட்ட தேட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்க அவர்களுக்குத் தத்துவமுண்டா? கபுருக்கு எதிரே கைகட்டி ஸியாரத்துச் செய்யலாமா? கொடி ஏற்றலாமா?
உரூஸ் - கந்தூரி நடத்தலாமா? நேர்ச்சைகள் செய்யலாமா? கபுறுகளையோ அவற்றின் வாசற்படிகளையோ முத்தமிடலாமா? போர்வை, பூ, புஷ்பம் போடலாமா? என்பன தற்போது விவாதத்திற்கு உரியவையாயிருக்கின்றன. இவை போன்ற ஐயவினாக்களை தெளிந்து தெரிய குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் கொண்டும், சரித்திர ஆதாரங் கொண்டும் அத்தாட்சிகள் தருகின்றோம். அறிவுடையோர் அறிந்துணர்க!
விளங்க சக்தியற்றோர் ளாஹிர், பாத்தின் இவ்விரண்டும் ஒருங்கேயமைந்த அறிஞர் பெருமக்களான உண்மை உலமாக்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்க.
நீங்கள அறியாதவர்களாயிருப்பின் (முஷாஹதாவுடைய) அறிவு பெற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது திருமறை (16:43) போதனையாகும்.