Friday, March 23

கவிதை "தொழுது வா!"

 தொழுது வா!

கவிஞர். எம்.ஏ.சி. றபாய்தீன் ஜே.பி

இறையடியானே! இன்ஸானே!
இறையழைப்புக் கேட்டாயா?
இறைவனைத் தொழுதாயா?
இறைவனிடம் அழுதாயா?
இபாதத்துக்கள் செய்தாயா?

இறைவணக்கம் தொழுகையதை
என்னவென்று நினைக்கின்றாய்!
இறையழைப்புக் கேட்டும் நீ
ஏனின்னும் இருக்கின்றாய்!
இறை கடமை செய்யாமல்
ஏன் பாவம் செய்கின்றாய்!

தொழுகையென்றால் என்னவென்று
தோழா நீ எண்ணிப்பார்!
தொழுகையது மிஃறாஜ் என்ற
தத்துவத்தை உணரப்பார்!
தொழுகையினால் இறைவனது
நெருக்கம் வரும் உற்றுப்பார்!
இறைகொள்கை ஈமானை
ஏற்றுவிட்ட உந்தனுக்கு
இறைவணக்கம் தொழுகையது
ஏற்ற நல் கடமையாகும்.
குறை நீக்கும் மனிதனாக்கும்!
குவலயத்தில் புனிதனாக்கும்!.

தொழுது தொழுது வருவதனால்
தொடர் பாவம் நீங்கிவிடும் 
அழுது அழுது கேட்பதனால்
அவனளவில் சேர்த்துவிடும்
பழுது பட்ட உன் நெஞ்சும்
பால் போன்று ஆகிவிடும்!

-----------முற்றும்-------------

கவிஞர். எம்.ஏ.சி. றபாய்தீன் ஜே.பி, காத்தான்குடி, இலங்கை.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK