“அபுத்தகீ”
இத்தொடர் கட்டுரை "தஃதீறுல் அனாம் பீ தஃபீரில் மனாம்" (கனவுக்கு விளக்கம் சொல்வதில் மனிதர்களை மணமாக்கி வைத்தல்) என்னும் அறபு நூலைத் தழுவி எழுதப்படுகிறது.
இந்நூல் ஷெய்குல் ஆரிபீன் முறப்பிஸ் ஸாலிகீன் அல் இமாம் அப்துல் கனீ அந்நாபலஸீ (றழி) அவர்களால் எழுதப்பட்டதாகும். வாசகர்கள் தொடர்ந்து வாசித்து பயன்பெறுமாறு வினயமுடன் வேண்டுகின்றோம்.
“நுபுவ்வத்” நபித்துவம் எங்கள் நபீ முஹம்மது (ஸல்) அவர்களுடன் முற்றுப்பெற்று விட்டது. ஆனால் “முபஷ்ஷிறாத்” சுபசோபனங்கள் எஞ்சியுள்ளன. அதுவே “அர்றுஃயதுஸ்ஸாலிஹத்” எனப்படும் நல்ல கனவாகும்.
ஆனால் நபீமார், றசூல்மரைப் பொறுத்து கனவும் வஹீயேயாகும். நபீமார் எங்கள் போன்றவர்களல்லர். அவர்களுக்கு விழிப்பில் வஹீ வரும்.அதேபோல் "அர்றுஃயதுஸ்ஸாலிஹத்” எனப்படும் கனவும் வஹீயாகவே கணிக்கப் படுகிறது.
நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் கனவில் தனது மகனை அறுக்கக் கண்டார்கள். விழித்ததும் மகனை அறுத்தார்கள். ஆனால் அறுபடவில்லை. பதிலாக ஆட்டை அறுத்தார்கள்.
நபீ முஹம்மது (ஸல்) அவர்கள் தற்போது “அதான்” பாங்கு சொல்லப்படும் முறையைக் கனவில் கண்டார்கள். விழித்ததும் அமுல் செய்தார்கள்.
அவ்லியாக்களின் சிறப்பைக் கூறும் அல்குர்ஆன் “லஹுமுல் புஷ்றஹ் பில் ஹயாத்தித் துன்யா வபில் ஆகிறஹ்” இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு சுபசோபனம் என்று கூறுகிறது.
இதற்கு விளக்கம் கூறும் இமாம்கள் இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு கிடைக்கும் சுபசோபனம் “அர்றுஃயஸ் ஸாலிஹத்” எனும் நற்கனவு என்றும் “றுஃயதுல்லாஹ்” எனப்படும் இறைகாட்சி என்றும் விளக்கம் சொல்கிறார்கள்.
இதனையே நபீ (ஸல்) அவர்கள் ““அர்றுஃயதுஸ் ஸாலிஹத்” எனப்படும் நல்ல கனவுளைக் கொண்டு எவர் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவில்லையோ அவர் அல்லாஹவைக் கொண்டும் மறுமை நாளைக் கொண்டும் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவர்” என்று நவின்றுள்ளார்கள்.
மேலும் “வஹ்யு” எனப்படும் இறை கட்டளைகளில் நபீ (ஸல்) அவர்களுக்கு முதலில் கிடைத்தது “அர்றுஃயதுஸ்ஸாலிஹத்” எனப்படும் நல்ல கனவுதான் என்றும் அக்கனவுகளை மறைவின்றி மிகத்தெளிவாகவே நபீகள் கண்டார்கள் என்றும் அன்னை ஆயிஷஹ் நாயகி அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு நாள் நபீ (ஸல்) அவர்கள் அபூபக்கர் ஸித்தீக் (றழி) அவர்களைப் பார்த்து, “அபாபக்ரே, நான் ஒரு கனவு கண்டேன். அதில் நானும் நீங்களும் ஒரு தறஜஹ் உயர்ந்து கொண்டே சென்றோம். ஆனால் நான் இரு மிர்காதினால் உங்களை முந்திவிட்டேன் என்று கூறினார்கள்.
அதற்கு அபூபக்கர் ஸித்தீக் ‘’யா றசூல்லாஹ்” அல்லாஹ்வின் திருத்தூதரே அல்லாஹ் அவனளவில் உங்களை அழைத்துக் கொள்வான். ஆனால் நான் உங்களின் பின்னே இரண்டரை வருடங்கள் மட்டும் ஜீவிப்பேன்” என்று கூறுனார்கள். அதேபோன்றே அபூபக்கர் (றழி) அவர்கள் நபீ (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரிந்து இரண்டரை வருடங்களால் மறைந்தார்கள்.
கனவைப் பல பிரிவுகளாக வகுக்கப்படுகிறது
அதில் ஒரு பிரிவு தபாஇஃ எனப்படும். இயற்கை நிலை மிகைப்பதாலும், ஷெய்தானின் ஊசலாட்டத்தாலும் நப்ஸ் மனோஇச்சை மிகைப்பதாலும் கனவு தென்படுகிறது.
ஷைத்தானின் தீங்குகள் தென்படும் கனவுகளுக்கு விளக்கம் கிடையாது. இத்தகு கனவுகள் காண்பவர் கண்ட கனவை எல்லோரிடமும் கூற கூடாது. ஒரு ஆலிம் மார்க்க அறிஞரிடம் கூறியே விளக்கம் கேட்கவேண்டும் தகுதியற்ற பிறரிடம் அதைக் கூறும்போது அவர் தகாத விளக்கத்தை கூறிவிடலாம். அதனால் கனவைக் கண்டவருக்கு சில பாதகங்கள் ஏற்பட இடம் உண்டாகிவிடுகிறது.
ஏனெனில், நபீ (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து அல்லாஹ்வின் றசூலே எனது தலை வெட்டப்பட்டது அதை நான் தொடர்ந்து செல்வதாகக் கனவு கண்டேன். என்றார் அதற்கு நபீகள் (ஸல்) "ஷைத்தான் உன்னுடன் கனவில் விளையாடி இருக்கிறான்" யாரிடமும் இதைச் சொல்லாதீர்கள் என்று நபீகள் நவின்றார்கள்.
நப்ஸ் மனோ இச்சை மிகைப்பதால் ஏற்படும் கனவுகளும் உள்ளன. தாம் விரும்புவதையும், தனது விருப்பமானவரையும் காண்பது. அதேபோல் தாம் பயப்படுவதையும், பயப்படுபவரையும் காண்பதாகும்.
ஒருவன் பசியுற்றவனாக இருந்தால் சாப்பிடக் காண்பான். வயிறு நிரம்பியவனாக இருப்பின் வாந்தி எடுப்பதாகக் காண்பான் சூரிய ஒளியில் தூங்குபவனாக இருந்தால் அவன் நெருப்பில் எரியக் காண்பான். தனது அங்கங்களில் நோவுள்ளவன் வேதனை செய்யப்படுபவனாக காண்பான்.
பாதில்-அசத்தியமான கனவுகளாக பின்வருவன கூறப்படுகின்றன. இக் கனவுகளுக்கு தஃபீர் விளக்கம் கிடையாது.
நப்ஸ் மனோ இச்சை மிகைப்பால் தோற்றுவது, குளியை வருத்தும் ஸ்கலிதம் வெளியாகுதல், ஷைத்தானின் அச்சம் ஏற்படும் கனவு, இயற்கை மாற்றங்களால் தோற்றும் கனவு, நோவு, வலிப்பு தோன்றும் கனவு ஆகியனவாகும்.
உண்மையான கனவுகள் பின்வருமாறு வகுக்கப்படுகின்றன. அதில் ஒன்று வெளிப்படையிலேயே உண்மையான கனவுகளாகும். இக்கனவு நபீத்துவத்தில் ஒரு பிரிவாகவும் கருதப்படுகிறது.
உதாரணமாகக் கூறின் நபீ (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவை அடைந்த போது ஒரு கனவு கண்டார்கள் நபீ (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் பயமற்றவர்களாக மக்காவில் நுழைந்து தவாப் செய்யவும் குர்பான் கொடுக்கவும் முடிகளை சிரைக்கவும், கத்தரிக்கவும் கனவில் கண்டார்கள்.
அதை தமது தோழர்களுக்க சுபச் செய்தியாகவும் சொன்னார்கள். இக்கனவு தாம் கண்டதுபோல் பின்னால் நிஜமாக நடந்தது இதேபோன்றுதான் நபீ இப்றாஹீம் (அலை) தம் மகனை அறுக்கக் கண்டதுமாகும்.
இவை தெளிவான கனவுகளாகும். இப்பிரிவைச் சேர்ந்த கனவை, கனவுக்குரிய மலக்கின் தொடர்பின்றி அல்லாஹ்வே காண்பிக்கின்றான்.
இரண்டாவது அர்றுஃயஸ் ஸாலிஹத் எனப்படும் நல்ல கனவுகளாகும். இக்கனவுகள் அல்லாஹ்வின் சுபச்செய்தி சொல்லப்படும் கனவுகளாகும். இவ்வகைக் கனவு பற்றி நபீ (ஸல்) அவர்கள் சொல்கையில்,
“கனவுகளில் சிறந்த கனவு, ஒரு அடியான் தனது றப்பை தன்னைப் படைத்து வளர்த்த அல்லாஹ்வை காண்பதாகும் அல்லது தனது நபீயைக் காண்பதாகும். அல்லது தனது முஸ்லீமான பெற்றோரை காண்பதாகும்” என்று கூறினார்கள்.
அப்போது நபீத் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே ஒருவர் தனது றப்பை (அல்லாஹ்வை) காண்பாரா? என்று....
கனவின் கருத்து தொடரும்....