ஹஜ் ஒருவெறும்சடங்கல்ல அது அர்த்தம் நிறைந்த வணக்கம்
மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ
அன்பினிய வாசகர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.

தற்போது ஹஜ்ஜுடைய காலம். வசதி படைத்த முஸ்லிம்கள் புனித மக்கஹ் நகர் சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இது உலக முஸ்லிம்களுக்கு கிடைத்த அதி சிறப்பாகக் கருதப்படுகின்றது.
அன்று நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் இறைகட்டளைப்படி ஹஜ்ஜைப் பிரகடனம்செய்தார்கள். அன்று முதல் இன்று வரை உலகின் பல திசைகளிலிருந்தும் வருடா வருடம் புனித ஹஜ் வணக்கத்திற்காக மக்கஹ் விற்கு முஸ்லிம்கள் சென்றுகொண்டே இருக்கின்றனர். கியாமத் நாள் வரை சென்று கொண்டே இருப்பர்.
ஆனால் ஹஜ்ஜுக்காகச் செல்லும் முஸ்லிம்களில் அதிகமனோர் கடமை என்ற அடிப்படையில் ஹஜ்ஜைச் செய்கின்றனரே அன்றி அதன் யதார்த்தத்தை அறிந்துசெய்வதில்லை. ஹஜ் என்பது யதார்த்தம் நிறைந்தது.அதன் ஒவ்வொறு செயலுக்கும் அர்த்தம் உள்ளது.
அது ஏனைய வணக்கங்கள் போன்றதல்ல. ஹஜ்ஜின் ஒவ்வொறு செயலிலுமுள்ள அர்த்தத்தை தெரிந்து செய்யும் போதுதான் அதன் பயனைப் பெறுவதுடன் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும். இன்றேல் அன்னிய மத சகோதரர்கள் செய்யும் மார்க்க அனுட்டானங்களுக்கும் எமக்கும் வித்தியாசமின்றிப் போய்விடும்.
எல்லோரும் “இஹ்றாம்” வெள்ளை உடையணிந்து துறவிகள் போல் தோற்றுகின்றோம்.வெறும் கல்லை முத்தமிடுகின்றோம் கல்லுக்கு கல்லால் எறிகின்றோம்.
குர்பான் கொடுக்கின்றோம்.இப்படி இப்படி எத்தனை விடயங்களைச் செய்கின்றோம் எல்லோரும் அணைத்தையும் அர்த்தம் தெரிந்தாசெய்கின்றனர்?. இல்லை அதிகமானோர், அர்த்தம் தெரியாமலேயே ஹஜ்ஜை செய்து முடிக்கின்றனர்.
இதற்குக் காரணம் இஸ்லாமிய சன்மார்க்கம் என்பது, சரீஅத், சட்டம் மட்டும்தான் என்று நினைப்பதும், கொள்கையை அறியாது அமல்களில் மட்டும் வாழ்ந்து மரிப்பதும் சூபித்துவ ஞானத்தை இஸ்லாத்திற்கு முரணானது என்று கருதுவதுமேயாகும்.
அகீதா எனப்படும் கொள்கை விளக்கம் தெரிந்திருந்தால்தான் இபாதத்தின் இரகசியமும் குறிப்பாக ஹஜ்ஜின் தத்துவங்களும் புரியவரும். இன்றேல், புரியப்படும் வணக்கங்கள் யானை உண்ட விலாம்பழம்போலும், கூள் முட்டைகள் போன்றுமே ஆகிவிடும்.
கஃபாஹ்வை ஏழுமுறை வலம் வருகின்றோம், எதற்காக? தன்னை ஆட்சி செய்யும் ஏழு நப்சின் தீய குணங்களையும் நீக்குவதற்காக, தலை முடியை நீக்குவது எதற்காக வெள்ளை உடையணிவது எதற்காக இறைவா நான் எனது கெட்ட குணங்களைக் களைந்து இந்த வெள்ளை உடைபோல் தூயவனாகவிட்டேன் என்பதைக் காட்டுவதற்காக!
கல்லை முத்தமிடுவது எதற்காக? சோக்/பிளேட்டின் பேப்பர் மையை உறிஞ்சிக் கொள்வது போல் எனது பாவங்கள் இக்கல்மூலம் உறிஞ்சப்படவேண்டும் என்பதற்காக! கல்லுக்கு கல்லால் எறிவது எதற்காக! என்னுள் ஆட்சி செய்யும் கெட்ட சைத்தான்கள் என்னை விட்டும் நீங்கி அவை அழிந்துவிடுவதற்காக. குர்பான் கொடுப்பது எதற்காக தன்னை ஆட்சி செய்யும் நான் என்ற கெட்ட நப்ஸை அறுப்பதற்காக இவை சில அர்த்தங்கள்தான்.
இதைவிட விளக்கங்கள் ஹஜ்ஜின் தத்துவங்களாக உள்ளன. இவற்றை ஆரிபீன்களான –அல்லாஹ்வை அறிந்த மெஞ்ஞானிகளிடம் சென்று தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றை அறியாமல் ஒருவர் ஹஜ் வணக்கத்தை செய்யும்போது கடமையைச் செய்தாரேயன்றி தான் செய்த ஹஜ்ஜின்மூலம் யதார்த்த்தை அறியாதவராகிவிடுகின்றார்.
இவற்றை அறிந்து செய்தவர் கடமையை செய்தவராகவும், இறை இரகசியத்தை புரிந்தவராகுமாகின்றார். இவரது ஹஜ்ஜுதான் உண்மையான ஹஜ்ஜாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகவும் கணிக்கப்படுகின்றது. இந்த ஹாஜிதான்/ ஹாஜ்ஜஹ் தான் நபீகள் (ஸல்) அவர்களால் புகழப்பட்ட அன்று பிறந்த பிள்ளை போன்றவராகின்றார்.
அன்று பிறந்த பிள்ளை எப்பாவமும் அற்ற, பால் மனங் கொண்டதாக இருக்கும் அதேபோல் யதார்த்த்தை அறிந்து ஹஜ் செய்தவர் எப்பாவமும் அற்றவராக பால் மனம் கொண்ட குழந்தையாக ஆகிவிடுகின்றார்.
எனவே நூறு வயதுடைய பாவங்களில் முழ்கிய மனிதனைக்கூட அன்று பிறந்த பாலகனுடைய நிலைக்கு மாற்றும் மகோன்னத நிலை ஹஜ்ஜில் மட்டுமே உண்டு என் பதை உணர்ந்து, ஹஜ் வணக்கத்தின் தத்துவங்களைஅறிந்து ஹஜ்கடமையை நிறைவேற்ற வேண்டும்.
அடுத்து, ஹஜ்வணக்கத்திற்காக செல்லும் பலர் ஹஜ்ஜை செய்து விட்டு மதீனாவுக்குச் சென்று மன்னர் நபீ முகம்மது (ஸல்) அவர்களை ஸியாரத் செய்யாமலேயே திரும்பி விடுகின்றனர். நபீ (ஸல்) அவர்களின் மகத்துவம் புரியாதவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.
எவர், ஹஜ் செய்து பின்னர் மதீனா வந்து என்னை தரிசிக்கவில்லையோ அவர் என்னை வெறுத்துவிட்டார் என்று நபீ (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.
அது மட்டுமின்றி, ஒரு மனிதனின் பாவம் மன்னிக்கப்படுவதற்கும் அவர் நபீ (ஸல்) அவர்களின் திரு றவ்ழாவுக்குச் சென்று நபீ மணியவர்களை தரிசிக்க வேண்டுமென்றும் திரு குர்ஆன் கூறுகின்றது.
எனவே, பணம், பொருள் மனைவி, மக்கள் உற்றார் உறவினர், உறக்கம் சுகம் அனைத்தையும் துறந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவோர் அதன் அர்த்தங்களைத் தெரிந்து செய்யவேண்டும் என்றும், மதீனா நகர் சென்று நபீயவர்களை ஸியாரத் செய்ய வேண்டுமென்றும் இவ் சிறிய தத்துவத்தினூடாகக்கேட்டுக்கொள்கிறோம்.
தௌஹீதின் குரல் அல்மிஷ்காத் ஞான இதலின் ஆசியர் தலையங்கத்திலிருந்து..
சங்கைக்குரிய மௌலவீ எச்.எம்.எம். இப்றாஹீம் நத்வீ அவர்கள் எழுதிய சிறு கட்டுரை....