இலங்கையில் காத்தான்குடியில் அண்மையில் சில பள்ளிவாயல்களில் புதிதாக ஜூம்ஆக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாக காத்தான்குடி ஜம்மியத்துல் உலமாவும் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனும் இணைந்து கடந்த 07.10.2011 வெள்ளிக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறும் ஒரு முக்கிய அறிவித்தலை 13.10.2011 வியாழக்கிழமை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------
அன்புப் பொதுமக்களுக்கு பள்ளிவாயல் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல். அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்..
அண்மைக் காலமாக நமது பகுதியில் புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டு வரும் ஜும்ஆக்கள் நமதூரின் கட்டுக்கோப்புக்கும் சமூக ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்ற அச்சதினாலும் எதிர் காலத்தில் மேலும் பல ஜும்ஆக்கள் ஆரம்பிக்கப்படலாம் என்பதோடு,மறைந்துபோன பித்அத்துக்கள் ஷிர்க்குகள் மீண்டும் தொடரக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுவதாலும் நமதூரினதும் சமூகத்தினதும் நலன் கருதி சம்மேளனம் உடனடியாக கீழ்குறிப்பிடும் சில நடவடிக்கைகளை முதற்கட்டமாக மேற் கொண்டிருப்பதினை பொது மக்களாகிய உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
(வாசகர்களின் பார்வைக்காக உள்ளே அறிவித்தல் இணைக்கப்பட்டுள்ளது.)
கடந்த 07.10.2011 அன்று வெள்ளிக்கிழமை பி.ப 8.00 மணிக்கு சம்மேளனத்தின் காரியாலயத்தில் நமதூர் ஜும்ஆப் பள்ளிவாயல்களின் நிருவாகிகள், ஜம்இயத்துல் உலமாவைச் சேர்ந்த உலமாக்கள், கௌரவ பிரதி அமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் MP, கௌரவ மாகாண சபை உறுப்பினர், காத்தான்குடி நகர பிதா, காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், சம்மேளன அவசரக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மிக நீண்டநேரம் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானங்களாவன:
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் எல்லைப் பரப்பிற்குற்பட்ட பிரதேசங்களில் சம்மேளத்தினதும் ஜம்இயத்துல் உலமாவினதும் அனுமதியின்றி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து ஜும்ஆக்களையும் உடனடியாக நிறுத்துவது என்றும்,
தௌஹீத் அடிப்படையில் ஜும்ஆவை நடாத்துவதற்காக ஒரு பள்ளிவாயலை அனுமதிப்பதென்றும், அதற்காக தௌஹீத் அடிப்படையில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிக் சென்டர் பள்ளியில் ஜும்ஆத் தொழுகையை நடாத்த அனுமதிப்பதென்றும் அப்பள்ளிவாயலில் ஜும்ஆக்கள் ஓதுவதற்கு ஏனைய தௌஹீத் அமைப்பின் உலமாக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்றும்,
இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் நமது பிரதேசத்தின் வழமையான ஏனைய ஜும்ஆப்பள்ளிவாயல் நிர்வாகிகளும், ஜம்இயத்துல் உலமாவும் சம்மேளனமும், ஏனைய அரசியல் முக்கியஸ்தர்களும், கலந்துரையாடி மேற்படி ஜும்ஆக்களில் உள்ள உலமாக்களினால் தெரிவிக்கப்படும் பித்அத்துக்களை தவிர்த்து எல்லா ஜும்ஆப் பள்ளிவாயல்களிலும் ஒரே விதமான ஜும்ஆக்களை நடாத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும்,
ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு குறித்த தீர்மானங்களை சம்பந்தப்பட்ட தஃவா அமைப்புக்களுக்கும், பொது மக்களுக்கும், முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும், வக்பு சபைக்கும், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவிற்கும், மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
இம்முடிவுகளை புதிதாக ஜும்ஆ நடாத்தும் நான்கு தஃவா அமைப்புக்களுக்கும், தனித்தனியாக சம்மேளனத்தில் அழைத்து மேற்படி தீர்மானங்களை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தி, இவ்வூரினதும் சமூகத்தினதும் ஒற்றுமையையும் அமைதியையும் கருதி தற்காலிகமான தங்களின் ஜும்ஆக்களை இடை நிறுத்தி ஒத்துழைக்குமாறு மிகப் பணிவாக வேண்டுகோள் விடுத்தது.
தனித்தனியான கலந்துரையாடலுக்கு புதிதாக ஜும்ஆ நடாத்தும் சகோதரர் சஹ்ரான் என்பவரது தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மட்டும் சமூகம்தர மறுத்து விட்டார்கள்.
என்பதனையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்வதுடன் இவ்விடயத்தில் நமதூரின் ஒற்றுமையையும் சமூகக் கட்டுப்பாட்டையும் நலிவுறச் செய்யக்கூடிய எந்த விடயங்களுக்கும் பொதுமக்களாகிய நீங்கள் ஆதரவு வழங்க வேண்டாம் என மிக வினையமாக கேட்டுக் கொள்கின்றோம்.
ஜஸாக்கல்லாஹு ஹைர்
---------------------------------------------------------------------------------------------
நன்றி
Speical News Group-UK (London)