هوالاول والآخر والظاهر والباطن وهو بكل شيئ عليم
அவனே முந்தியவன். அவனே பிந்தியவன். அவனே வெளியானவன். அவனே உள்ளானவன். அவன் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
(சூரதுல் ஹதீத்)
என்ற இறை வசனத்திற்கேற்ப சிறீ குரு மஹாநந்தா பாபா வலிய்யுல்லாஹ் நாயகம் அவர்களின் ஆன்மீக ஏகத்துவக் கவிதைகள் இதுவாகும்.
காமிலான ஷெய்குமார்களின் கரங்களைப் பற்றி, ஆன்மீக வழி நடக்கின்ற முரீதீன்கள், முஹிப்பீன்கள் அனைவருக்கும் அரிய வரப்பிரசாதமாக இவர்களின் கவிதைகள் அமையுமென நம்புகின்றோம்.
இறைவனைப் பற்றி அறியாமல் தாத்துக்கும் சிபாத்துக்கும்,படைப்புக்கும்,படைத்தவனுக்கும்,இடையேயானதொடர்புகளை உணராமல் அமல் செய்யக்கூடிய தற்கால வழி தவறிய கூட்டங்களுக்கு கசப்பாக அமையலாம்.
எனவே இதை வாசிக்கக் கூடியவர்கள் இறை அறிவை கற்றுக் கொள்ளும் நோக்குடன் படிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பிரஹ்ம ஜீவ ஐக்கியம்
மூலம்
1.
நானல் லாது நீயல்ல
நீயல் லாது அவனல்ல
அவனல் லாது தானல்ல
தானல் லாது வேறல்ல
2.
நானே மறைந்து நீயானாய்
நீயே மறைந்து அவனானாய்
அவனே மறைந்து தானானாய்
தானே மறைந்து அணுவானாய்
3.
அணுவா யிருந்து அருவானோம்
அருவா யிருந்து உருவானோம்
உருவா யிருந்து ஒன்றானோம்
ஒன்றா யிருந்து பலவானோம்
4.
பலவா யிருந்து ஜகமானோம்
ஜகமா யிருந்து ஜடமானோம்
ஜடமா யிருந்து வடிவானோம்
வடிவா யிருந்து பெயரானோம்
5.
பெயரா யிருந்து மகத்தானோம்
மகத்தாயிருந்து உணர்வானோம்
உணர்வா யிருந்து அறிவானோம்
அறிவா யிருந்து வளமானோம்
6.
வளமா யிருந்து குணமானோம்
குணமா யிருந்து குணியானோம்
குணியா யிருந்து குறியானோம்
குறியா யிருந்து இனமானோம்
7.
இனமா யிருந்து குலமானோம்
குலமா யிருந்து யுகமானோம்
யுகமா யிருந்து தொகையானோம்
தொகையா யிருந்து பொருளானோம்
8.
பொருளாய்த் தற்பதக் கலையானோம்
கலையாய்த் தொம்பதக் கிளையானோம்
கிளையாய் அசிபத நிலையானோம்
நிலையாய் நின்றே மிளிர்வானோம்
9.
மிளிர்வா யிருந்து தெளிவானோம்
தெளிவா யிருந்து நிறைவானோம்
நிறைவா யிருந்து நிஜமானோம்
நிஜமா யிருந்து நிகரானோம்
10.
நிகரா யிருந்து சுகமானோம்
சுகமா யிருந்து சுயமானோம்
சுயமா யிருந்து தொடரானோம்
தொடரா யிருந்து தொனியானோம்
11.
தொனியா யிருந்து மொழியானோம்
மொழியா யிருந்து இயலானோம்
இயலா யிருந்து இசையானோம்
இசையா யிருந்து நடமானோம்
12.
நடமா யிருந்து உறவானோம்
உறவா யிருந்து கருவானோம்
கருவா யிருந்து வினையானோம்
வினையா யிருந்து வித்தானோம்
13.
வித்தாய் முளையாய் விளைவானோம்
விளைவிக்கும் பொருள் விரிவானோம்
விரிவாய் கொத்தாய் சுவையானோம்
சுவையாய்ப் பயனாச் சத்தானோம்
14.
சத்தா யிருந்து வானானோம்
வானா யிருந்து வளியானோம்
வளியா யிருந்து கனலானோம்
கனலா யிருந்து புனலானோம்
15.
புனலா யிருந்து நிலமானோம்
நிலமா யிருந்து பயிரானோம்
பயிரா யிருந்து உயிரானோம்
உயிரா யிருந்து உயர்வானோம்
16.
உயர்வா யிருந்து ஒளியானோம்
ஒளியா யிருந்து வெளியானோம்
வெளியா யிருந்து உளமானோம்
உளமா யிருந்து மனமானோம்
17.
மனமா யிருந்து மகிழ்வானோம்
மகிழ்வா யிருந்து நனவானோம்
நனவா யிருந்து நனவானோம்
கனவா யிருந்து நினைவானோம்
18.
நினைவா யிருந்து மதியானோம்
மதியா யிருந்து வரவானோம்
வரவா யிருந்து விரவானோம்
விரவா யிருந்து திரமானோம்
19.
திரமா யிருந்து திடமானோம்
திடமா யிருந்து பரிவானோம்
பரிவா யிருந்து அமைவானோம்
அமைவா யிருந்து தரமானோம்
20.
தரமா யிருந்து லயமானோம்
லயமா யிருந்து பதியானோம்
பதியா யிருந்து பரமானோம்
பரமும் நீ-நான் ஒன்றானோம்.
.......................
-முற்றும்.-
இக்கவிதைகளுக்கான விரிவுரைகளும் அது சார்ந்த மெஞ்ஞான விளக்கங்களும் தொடர்ந்து எமது அகமியம் இணையத்தளத்தில் வெளிவரவுள்ளன...அல்ஹம்துலில்லாஹ்!