Friday, March 25

ரபீஉல் அவ்வல் சிறப்புக் கட்டுரை

(2006ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகிய அல்மிஷ்காத் பத்திரிகைக்கு மௌலவி. இப்றாஹிம் நத்வி அவர்கள் எழுதிய கட்டுரை) 

உலகில் தோன்றிய தீர்க்கதரிசிகளில் நபீ (முஹம்மது (ஸல்) அவர்களே அதி உயர்ந்தவர்கள்!  அதேபோல் அவர்களது “உம்மத்” சமூகமே அனைத்து சமூகங்களிலும் உயர்ந்தது! நபீமார்களில் பலர் நமது நபீயின் சமூகத்தில் தோன்றவே விரும்பினர். 

உலக மக்களில் றஸூல்மார்கள் நபீமார்களே உயர்ந்தவர்களாவர். அவர்களில் எங்கள் கண்மணி முஹம்மது (ஸல்) அவர்களேயே அல்லாஹ்தஆலா அதி உயர்ந்தவர்களாயும்அதி சிறப்படையவர்களாயும் ஆக்கியுள்ளான். எந்த நபிமாருக்கும் றஸுல்மாருக்கும் கொடுக்காத அந்தஸ்த்தை எங்கள் நபீக்கு இறைவன் வழங்கியுள்ளான். 
அதேபோல் எங்கள் நபியின் பொருட்டால் எந்த நபிமாரின் உம்மத் சமூகத்தவருக்கும் வழங்கியிராத மாண்பை அவர்களின் உத்தம் சமூகத்தினரான எங்களுக்கு இறைவன் வழங்கியுள்ளான் அனைத்து சமூகத்தவரிலும் எங்களையே இறைவன் மேம்படுத்தியுள்ளான். இக்கட்டுரையில் எங்கள் மாநபி அவர்களின் மாண்பையும் அவர்களது உம்மத் சமூகத்தவரின் மாண்பையும் ஆயாந்தோதுவதே நோக்கமாகும். 

மூஸா நபியின் வினாக்களும் இறைவனின் விடைகளும் 
வினாவிடை 1
நபி மூஸா (அலை)அவர்கள் இறைவனிடத்திலே கேட்கிறார்கள் “இறைவா நான் வேத ஏடுகளில் ஒரு உம்மத் சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் மற்றவருக்கு உன்னிடத்தில் சிபார்சு செய்பவர்களாகவும் சிபார்சு செய்யப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் அவர்களை எனது உம்மத் சமூகத்தவராக ஆக்கிவிடு என்று!” 

அதற்கு இறைவன் அவர்கள் நபி முகம்மத் ஸல்லள்ளாகு அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தாவர் என்று பதிலளித்தான். 

வினா விடை 2 
மூஸா : இறைவா நான் ஏடுகளில் பார்க்கிறேன் ஒரு சமூகம் செய்யும் குற்றங்களுக்கு பரிகாரமாக ஐவேளை தொழுகை வழங்கப்பட்டுள்ளது. அவர்களை எனது சமூகமாக ஆக்கிவிடு. 

இறைவன்: அது முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர். 

வினாவிடை 3 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தினரைப்பார்க்கின்றேன் அவர்கள் வழிகேடர்களுடன்போர் செய்வார்கள் அவர்களே குருடனான தஜ்ஜாலையும் கொல்வார்கள் அவர்களை எனது உம்மத் ஆக ஆக்கிவிடு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் சமூகத்தினர்! 

வினாவிடை 4 
மூஸா : இறைவா நான் ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் தண்ணீராலும் மண்ணாலும் சுத்தம் செய்கிறார்கள் அவர்களை எனது சமூகமாக ஆக்கி விடு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர். 

வினாவிடை 5 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் சதகஹ் (ஏழைவரி) களை எடுக்கிறார்கள் அதைச் சாப்பிடுகிறார்கள் முன் வந்த சமூகத்தவர் அதை நெருப்பினால் எரித்துவிடுபவர்களாக இருந்தார்கள் சதகஹ்வை எடுத்து சாப்பிடுபவர்களை எனது சமூகத்தவராக ஆக்கிவிடு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 6 
மூஸா : இறைவா! நான் ஏடுகளில் ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் ஒரு நன்மையைச் செய்ய நாடுகிறார்கள் ஆனால் செய்யவில்லை அதற்காக அவர்களுக்கு ஒரு நன்மை எழுதப்படுகின்றது. அதை செய்தால் பத்துத்தொடக்கம் எழுநூறுக்கு மேற்பட்ட நன்மைகள் அவர்களுக்கு எழுதப்படுகின்றன. அதேபோல் அவர்கள் ஒரு தீமையை நாடினார்கள் செய்யவில்லை. அதற்காக எத்தீமையையும் அவர்களுக்கு எழுதப்படுவதில்லை. அவர்கள் ஒரு தீமை செய்தால் ஒரு தீமையே அவர்களுக்கு எழுதப்படுகின்றது. இவர்களை எனது உம்மத்தாக ஆக்கு! 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 7 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்களில் எழுபதாயிரம் பேர் கேள்விகள் இல்லாமலேயே சுவர்கம் புகுதுகின்றனர். அவர்களை எனது சமூகமாக ஆக்கு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள் 

வினாவிடை 8 
இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்கள் உலகில் வந்த அனைத்து சமூகத்தவரிலும் சிறந்தவர்கள் அவர்கள் நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள் தீமையை விளக்குகிறார்கள் அவர்களை எனது சமூகமாக்கு 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 9 
மூஸா : இறைவா! ஒரு சமூகத்தைப் பார்க்கின்றேன் அவர்களே இறுதியானவர்கள் மறுமைநாளில் அவர்களே முந்தியவர்கள் அவர்களை எனது சமூகமாக ஆக்கு? 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

வினாவிடை 10 
மூஸா : இறைவா ஒரு கூட்டத்தைக் கண்டென் அவர்களின் வேதம் அவர்களது நெஞ்சத்திலிருக்கும். அவர்களை எனது சமூகமாக ஆக்கு! 

இறைவன் : அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தவர்கள். 

மேற்கண்டவாறு மூஸா நபீக்கும் அல்லாஹ்க்குமிடையே வினாவிடை தொடர்ந்து இறுதியில் மூஸா நபீ இறைவனிடம் ‘என்னையும் அந்த முஹம்மதின் சமூகத்தில் ஒருவராக ஆக்கிவிடு என்று கேட்டார்கள். 

அதனைக்கேட்டு மகிழ்ந்த இறைவன் “மூஸாவே உன்னை நான் எனது ‘ரிஸாலத்’ இறை தூதைத் கொண்டும், ‘கலாம்’ என்ற பேச்சைக் கொண்டும் உன்னை நான் தேர்ந்துவிட்டேன். உனக்கு நான் தருவதை எடுத்துக்கொள். நன்றியுடையோர்களில் ஒருவனாக ஆகிவிடு என்று சொன்னான். அதை மூஸா (அலை) அவர்கள் பொருந்திக் கொண்டார்கள். 

இறைவனுக்கும் மூஸா நபிக்கும் நடந்த இவ்வுரையாடலில் முஹம்மது (ஸல்) அவர்களின் ‘உம்மத்’ சமூகத்தவரின் பெருமாண்பு எத்தகு நிலையுடையதாக இருக்கும் என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

‘மிஹ்ராஜ்’ விண்ணுலக யாத்திரையின்போது வானவர்கோன் ஹழ்றத் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் மாநபி (ஸல்) அவர்கள் தமது உடலால் யாத்திரை செய்து எழு வானங்களைக் கடந்து ‘சித்றதில் முன்தஹா’ என்ற இறுதி எல்லையை அடைந்தார்கள். அப்போது ஜீப்ரீல் ‘அல்லாஹ்வின் தூதரே, முஹம்மதே செல்லூங்கள் என்றார்கள் அதற்கு மாநபீகள் நீங்கள் முதலில் புகுங்கள் என்றார்கள் 

அது கேட்ட ஜிப்ரீல், இந்த இடத்தைத் தாண்டுவதற்கு உங்களைத்தவிர வேறு யாராலும் முடியாது! நானாயினும் சரியே இதில் நான் ஒரு விரலளவு புகுந்தாலும் எரிந்து விடுவேன். நீங்களே இறைவனுக்கு மிக சங்கையானவர்கள். உட்புகுந்து செல்லுங்கள் என்றார்கள். நபீகள சென்றார்கள். 

‘நபீகளை விட ஜிப்ரீலே உயர்ந்தவர்’ என்ற முஃதஸிலாக்களின் வாதம் இவ்வரலாறின் மூலம் உடைந்து விடுகிறது. 

ஒளியினால் படைக்கப்பட்ட ஜீப்ரில் (அலை) அவர்களே எரிந்து விடுவார்களாயின் மனிதனுக்குப் பிறந்த முஹம்மது (ஸல்) அவர்களின் நிலை எத்தகு மகத்துவம் பொருந்தியதாகிவிட்டது . நபீகள் (ஸல்) அவர்களை நம்போன்ற சாதாரண மனிதனாகக் கருதுவோருக்கு இவ்வரலாறு சாட்டையடியாகும். 

நபீகள் நாயகம் சொன்னதாக ஹழ்றத் அபூஹூறைறஹ் (றழி) சொல்கிறார்கள் எனக்கு இறைவனால் ஐந்து விடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

1. நான் எல்லா மக்களுக்குமான றஸூலாக அனுப்பப்பட்டுள்ளேன். 

2. பூமி எனக்கு ‘மஸ்ஜித்’ சுஜூது செய்யும் இடமாகவும், சுத்தமானதாகவுமே ஆக்கப்பட்டுள்ளது. 

3.ஒரு மாத தொலைதூரம் பயணத்தைக் கொண்டு நான் உதவிசெய்யப்பட்டுள்ளேன் (பெருமானார் (ஸல்) ஓரிடத்திலிருந்தால் அதிலிருந்து ஒரு மாதம் பயணம் செய்யும் தூரம் பாதுகாப்பு வலயமாக அவர்களுக்கு ஆக்கப்பட்டுள்ளது. 

4. கொள்ளைப் பொருள்கள் அவர்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. 

5. ‘ஷபாஅத்’ பாவிகளுக்காக ‘ஷபாஅத்’ சிபார்சு செய்யும்நிலை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை எனது உம்மத்தினருக்காக நான் வைத்துள்ளேன். என்று! 

மேற்குறித்த ஐந்து பரிசில்களும் உலகில் தோன்றிய எவருக்கும் வழங்கப்படாதவையாகும். இதன்மூலம் மாநபீயின் மேன்மைநிலை அவர்களாலேயே உலக மக்களுக்கு எடுத்தோதப்பட்டுள்ளது. 

தர்க்கம் 
அமீறுல் முஃமீனின் ஹழ்றத் உமர் (றழி) அவர்களுக்கு ஒரு யஹூதியிடம் ஒரு தேவையிருந்தது 

அவனைக் கண்டபோது எல்லா மனிதரையும்விட முஹம்மது (ஸல்) அவர்களைச் தேர்ந்துக் கொண்ட இறைவன் மீது ஆணையாக நான் உன்னைத் தேடிக்கொண்டேயிருந்தேன். உன்னிடம் எனக்கு ஒரு தேவையுள்ளது என்றார்கள். 

அதைக் கேட்ட யஹூதி மற்ற மனிதரைவிட முஹம்மதை இறைவன் தேர்ந்து கொள்ளவில்லை என்றான். 

உமர் (றழி) அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது உடன் யஹூதியின் கன்னத்தில் அறைந்துவிட்டார்கள். உடன் யஹூதி நபீகளிடம் வந்து ‘முஹம்மதே எல்லா மனிதரைவிடவும் உங்களையே இறைவன் தேர்ந்து கொண்டான் என்று உமர் சொன்னார். அதை மறுத்தேன் எனது கன்னத்தில் அடித்துவிட்டார்’ என்றான். 

உமறுக்காக அவனிடம் பரிந்த நபீயவர்கள் அவனைப்பார்த்து “யஹூதியே ஆதம் சபியுல்லாஹ், இப்றாஹீம் கலீலுல்லாஹ், மூஸா நபிய்யுல்லாஹ், ஈஸா றுஹுல்லாஹ், நான் ஹபிபுல்லாஹ் என்று சொன்னதோடு இறைவனுக்கு ஒரு பெயர்கள் உள்ளன. ஒன்று ‘அஸ்ஸலாம’ அதைக்கொண்டு எனது உம்மத்தவருக்கு ‘அல் முஸ்லிம்’ என்று பெயர் வைத்துள்ளான் 

அவனது இரண்டாவது பெயர் ‘அல் முஃமின்’ அதை எனது சமூகத்தவருக்கு ‘அல் முஃமினின்’ என்று பெயர் சூட்டியுள்ளான். 

யஹூதியே, நீங்கள் முந்தியவர்கள் நாங்கள் பிந்தியவர்கள். ஆனால் மறுமையில் நாங்களே முந்தியவர்கள். 

யஹூதியே, சொர்க்கத்தில் நான் நுழையும்வரை ஏனைய நபீமார்களுக்கு அது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் எனது உம்மத்தவர்கள் சொர்க்கத்தில் நுழையும் வரைக்கும் ஏனைய சமூகத்தவர் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. 

சொர்க்கத்தில் நானே முதலில் நுழைவேன். அதன்பின் நபீமார்கள் நுழைவார்கள், உலமாக்களில் எனது ‘உம்மத்’ சமூகமே முதலில் நுழையும். அதன் பின்னரே ஏனையோர் நுழைவர். 

முஹம்மது நபீயின் உம்மத்தின் சிறப்புகள் 

ஹழ்றத் கஃபுல் அஹ்பார் (றழீ)சொல்கிறார்கள், 
இறைவன் தனது நபீமார்களை கண்ணியம் செய்ததுபோல் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத் சமூகத்தினரை மூன்று விடயங்களைக் கொண்டு சங்கைப்படுத்தியுள்ளான். 

1. ஒவ்வொறு நபீயையும் அவரவர் கூட்டத்தவருக்கு சாட்சியாக அனுப்பிவைத்தான். ஆனால் எங்கள் நபீயின் உம்மத்தை எல்லா மக்களுக்கும் சாட்சியாக ஆக்கினான். 

2. றஸூல்மார்களே, நீங்கள் மாணமான/நல்ல/ ஹலாலான உணவுகளையே உண்ணுங்கள். நல்ல (அமல்கள்) வேலைகளையே செய்யுங்கள் என்று றஸூல்மார்களுக்குச் சொன்னான். ஆனால் எங்கள் ‘உம்மத்’ சமூகத்தவருக்கு நீங்கள் கேளுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என்று சொல்கின்றான். 

எமது சமூகத்தின் மாண்புகள் 
நபீ முஹம்மது (ஸல்) அவர்களின் ‘உம்மத்’ சமூத்தவரை ஐந்து விடயங்கள் கொண்டு சங்கைப்படுத்தியுள்ளான். 

1.‘ளூஅபாஉ’ பலயீனர்களாகப் படைத்தான் அவர்களுக்குப் பெருமையேற்படாதிருக்க! 

2. சிறியவர்களாகப் படைத்தான். அவர்களின் உணவு, குடிப்பு, உடையுடைய செலவுகளைக் குறைப்பதற்காக 

3. அவர்களது பாவங்கள் குறைவதற்காக அவர்களின் வாழ்நாளைக் குறைத்தான் 

4. அவர்களது கேள்வி கணக்கு மறுமையில் குறைவதற்காக அவர்களை ஏழைகளாகப் படைத்தான் 

5. அவர்களை இறுதி ‘உம்மத்’ சமூகமாகப் படைத்தான். ‘கப்ர்’ மண்ணறையில் அவர்கள் சொற்ப கால் இருப்பதற்காக என்று! 

நபீ ஆதம் அலை அவர்களின் அருள்மொழிகள் 

நபீ ஆதம் (அலை) சொல்கிறார்கள், 
அல்லாஹ்தஆலா முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு நான்கு அற்புதங்களை வழங்கியுள்ளான். அவற்றை அவன் எனக்குத் தரவில்லை 

1. எனது ‘தவ்பஹ்’ பாவமன்னிப்பு மக்கஹ்விலேயே கிடைத்து. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினர் எல்லா இடங்களிலும் இருந்து ‘தவ்பஹ்’ செய்கின்றனர். அவர்களது பாவமன்னிப்பை இறைவன் ஏற்றுக்கொள்கின்றான். 

2. நான் உடையணித்தவனாகவே இருந்தேன். நான் மாறுசெய்தபோது இறைவன் என்னை ‘உர்யான்’ ஆக மாற்றினான். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தவர் உடையில்லாமல் இருந்து பாவம் செய்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் உடையணிவிக்கிறான் (நபீமார்கள் பாவம் செய்ய மாட்டார்கள் என்பதுதான் இஸ்லாத்தின் முடிவு இங்கே ஆதம் செய்த பாவத்திற்கு விளக்கம் இருக்கிறது. இவ்விடம் இடம் தராது) 

3. நான் பாவம் செய்தபோது என்னையும் எனது மனைவியையும் பிரித்துவைக்கப்பட்டது. ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் ‘உம்மத்’ சமூகத்தினர் மாறு செய்கிறார்கள் அவர்களையும் அவர்களது மனைவியரையும் இறைவன் பிரித்துவைப்பதில்லை 

4. நான் சொர்க்கத்தில் வைத்துக் குற்றம் செய்தேன் அதிலிருந்து என்னை இறைவன் வெளியேற்றினான். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தவர் சொர்கத்திற்கு வெளியிலிருந்து மாறு செய்கின்றனர். அவர்களை இறைவன் தவ்பஹ்வைக் கொணடு சொர்க்கத்தில் நுழைக்கிறான். 

நூஹ் நபியும் நமது உத்த்த்தினரும். 
இறைவன் நூஹ் நபீ (அலை) அவர்களிடம் ‘நீங்கள் உலகில் எனது ரிஸாலத் மார்க்கத்தை உங்கள் கூட்டத்தாருக்கு எத்தி வைத்தீர்களா? என்று கேட்பான் . அதற்கு நூஹ் நபீ ஆம் என்று சொல்வார்கள். 

பின் நூஹ் நபீயின் கூட்டத்தவரிடம் உங்கள் நபீ நூஹ் (அலை) அவர்கள் உங்களுக்கு ‘ரிஸாலத்’ என்ற தூதை எத்திவைத்ததாக சொல்கிறார்கள் அதை நீங்கள் ஏன் ஏற்கவில்லை என்று கேட்பான். அதற்கவர்கள் ‘ இறைவா! எங்களுக்கு அவர் உனது ரஸாலத்தை எத்திவைக்கவில்லை என்பார்கள். 

இறைவனாகிய உன்மீது ஆணையாக நீ எங்களிடையே உன்மீது ஒரு தூதரை அனுப்பியிருப்பின் நான்கள் அதைப்பின்பற்றி விசுவாசிகளாகியிருப்போம். நீ எமக்கு ஏவியதை நூஹ் நபீ எத்திவைக்கவில்லை என்பார்கள். அப்போது நூஹ் நபீயிடம் நீங்கள் உங்கள் கூட்டத்தவருக்கு மார்க்கத்தை எத்திவைக்கவில்லை என்று சொல்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு எத்திவைத்ததற்கு சாட்சிகள் உண்டா? என்று இறைவன் கேட்பான். 

அதற்கு நூஹ் நபீயவர்கள் ஆம் என்று கூறி முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மதினரே சாட்சிகள் என்று சொல்வார்கள். 

உடன் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்ம்தவர்களை இறைவன் அழைத்து நூஹ் நபீ தனது ஏவலை அவரது கூட்டத்தினருக்கு எத்திவைத்ததற்கு நீங்கள்தான் சாட்சி என்று சொல்கிறார். அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீரா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் ஆம் நூஹ் நபீ தமது சமூகத்துக்கு உனது கட்டளையை எத்திவைத்தார் என்பார்கள். 

அதைக்கேட்ட நூஹ் நபீயின் கூட்டத்தினர் முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினரிடம் நீங்கள் எப்படி சாட்சி சொல்வீர்கள். நாங்கள் உங்களுக்கு முன்தோன்றிய சமூதாயம் நீங்கள் பிந்திய சமூகம் நீங்கள் எப்படி சாட்சியாளர்களாக முடியும் என்பார்கள். 

அதற்கவர்கள் எங்கள் இறைவன் எங்களுக்கு ஒரு றஸூலை அனுப்பினான். அவருக்கு அல்குர்ஆன் என்ற வேதத்தை இறக்கினான். அதில் உங்கள் நபீ நூஹ் உங்களுக்கு இறைவன் ஏவலை எத்திவைத்தார் என்ற செய்தி எழுதப்பட்டுள்ளது. என்று நவின்று நூஹ் நபீயின் கூட்டத்தை வாயடைக்கச் செய்வார்கள். 

எனவே இதிலிருந்து முஹம்மது நபீ (ஸல்) அவர்களே உலகில் தோன்றியோரில் குறிப்பாக றஸூல், நபீமார்களில் உயர்ந்தவர்கள் என்பதும், அதேபோல் அவர்களது சமூகமே உலக மக்களில் உயர்ந்தவர்கள் என்பதும் வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிற் புலனாகின்றது 

எமக்கு வழங்கப்பட்ட உயர்வும் சிறப்பும் எமது கண்மணி நபீ முஹம்மது (ஸல்) அவர்களாலேயே வழங்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து எமது உயிர், உடல், உறவினர், பொருள் அனைத்தையும் அவர்களின் ‘மஹப்பத்’ உயர் நேசத்திற்காக தியாகம் செய்வோம். அவர்களின் அவதாரத்தை உளமகிழ்வுடன் கொண்டாடி மவ்லித் மஜ்லிஸ்களை ஏற்படுத்தி அன்னதானம் செய்வோம்.

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK