Wednesday, December 30

வலீயின் ஆரம்பம்


அரூபியான அல்லாஹ்தஆலா அகிலத்தில் தனக்குப் பிரதிநிதியாகச் சொரூபியான ஸெய்யிதுனா அபுல்பஷர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உண்டாக்கினான்.
Ar Rahman Mosque, Bahdad, Iraq
லாயஸாலு அப்தீ... என்னுடைய அடியான் நபிலான வணக்கங்களையும் விருப்புடன் பேணிச் செய்பவனாக நீங்கா வண்ணமாகி எனது முடுகுதலைப் பெறும் வண்ணம் நெருங்கி நான் அவனை நேசிக்கும் அளவுக்கு ஆகிவிடுகிறான் 


என்ற ஹதீது குத்ஸியின் படி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குர்பு-பறாயிலு, குர்பு-நவாபிலு அமல் செய்து நிறப்பமானபடியால் அல்லாஹ்வுக்கு கலிபாவாயிருந்து, உலகத்தின் காரியாதிகளை நடத்தி வந்திருக்கின்றார்கள். அவர்களில் நின்றுமே பஷரிய்யத்தென்னும் மனுவர்க்கம் இறுதித் தீர்ப்பு நாள் பரியந்தம் வெளியாகிக் கொண்டே வருகின்றது.

ஸெய்யிதுனா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உள்ரங்கத்தில் விலாயத்தும் வெளிரங்கத்தில் நுபவ்வத்தும் உடையவர்களாயிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு பல நபிமார்கள் வெளியாகி இறுதி நபியாக எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றினார்கள்.

எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு நபியில்லையாகையால் அவர்கள் பால் பகிரங்கமாக இருந்த நுபவ்வத் அந்தரங்கமாகி அந்தரங்கமாக இருந்த விலாயத் பகிரங்கமாயிற்று. அதைச் சுமந்தவர்கள் தான் அவுலியாக்களாவர். ஆகவே நபியுடைய முடிவு வலியுடைய ஆரம்பமாகும்.


நுபவ்வத்தாகிய நபித்துவத்தில் தொடர்பு முடிவடைந்து விட்டபடியால் ஒவ்வொரு காலத்திலும் நபியின் பிரதிநிதியாக ஒருவர் நியமனமாகின்றார். அத்தகையவர் யுகமுடிவு நாள் வரை ஏற்பட்டுக் கொண்டேயிருப்பர். 


அவரே ஆண்டவனுக்கு முடுகுதல் பெற்ற வலி, கூட்டத்தினருக்கு இமாம், அவரே நேர்வழி காட்டக்கூடிய ஹாதியும் மஹ்தியுமாவார். 


வலது, இடது இரு பக்கங்களிலும் அன்னாருக்கு அமைச்சர்கள் இருக்கின்றனர், அவர்களும் வலிமார்களாகவே இருக்கின்றனர் என்பதாக மௌலானா முஹம்மது ஜலாலுத்தீன் ரூமி ரலியல்லாஹு தஆலா அன்ஹுமஸ்னவி ஷரீபில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹுதஆலா நபிமார்களுக்குத் தனது திருவசனமாகிய வஹியைக் கொண்டு பயிற்சியளித்தான். அவுலியாக்களுக்கு தெய்வீக உதிப்பாகிய இல்ஹாமைக்கொண்டு பயிற்சியளிக்கிறான். அவுலியாக்கள் நபிமார்களுடைய நிருவாகப் பொறுப்பாளர்களாகவும் பிரதிநிதிகளாகவும், வாரிசுகளாகவும் ஊழியர்களாகவும் இருக்கின்றார்கள். 


இத்தகைய நல்லடியார்களே உலகப் பிரஜைகளுடையவும், உலகத்துடையவும் காரியஸ்தர்களாகவும் உலகத்தை நிலைப் பெறச் செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களைக் கொண்டே உலகமும் நிலைபெற்றிருக்கின்றது. 


அவர்கள் சிருஷ்டிகளை ஆளுபவர்களாகவும், மெய்ப்பொருளின் பிரதிநிதிகளாகவும் இருப்பது புறத்தோற்றத்தில் அன்று உள்ரங்கத்திலேயாம் என்பதாக தாஜுல் அவ்லியா ஸெய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானீரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்பத்ஹுர்ரப்பானியில் உபதேசித்துள்ளார்கள். 


எனவே அன்னாரே சர்வ இரட்சகர், அன்னாரைப் பொறுத்தே சகல லோகக் காரியாதிகளெல்லாம் சுற்றியாடுகின்றன. அன்னாரைக் கொண்டே அல்லாஹுதஆலா உலகங்களைக் காக்கின்றான். 


அன்னாரே மஹ்தீ என்றும், காத்தமுல் அவுலியா என்றும் சொல்லப்படும். அன்னவர் காலத்தில் அன்னார்தான் காத்தமுல் அன்பியா, ஸெய்யிதுனா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பதவியாகிய மகாமன் மஹ்மூதாவில் தரிபட்டிருப்பவர். 


அன்னாரே கலீபத்துல்லாஹ் என்ற தெய்வப்பிரதிநிதியாக இருக்கின்றார் என்பதாக ஆரிபு றப்பானி ஹஜ்ரத் ஸெய்யிது அப்துல்கரீம் ஜியலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் இன்ஸான் காமிலில் கூறுகிறார்கள்

(நன்றி- ஜியாரத்)

 
Design by Ahamiyam themes | Hosted by Fizmad - Ahamiyam,UK | Ahamiyam followship,UK